Saturday, April 01, 2006

nivetha comment

பதிவுக்கு நன்றி நிவேதா...

//சத்யஜித்ரேயும், அகிரா குரோசோவாவும் இயக்கினால் மட்டும்தான் இவர்கள் பார்க்க வருவார்களாயிருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.//

;-)படத்தில கொங்கனா சென்னின் நடிப்புப் பிடித்திருந்தது. மன நோயானவர்கள் தமதான உலகத்தில் தமதான எதிர்பார்ப்புகளுடன் (கோபப்பட்டும், அதை மறந்தும், வன்முறைக்குட்படுத்தும் அதை மறந்து,) இயல்பாய் இருக்கிறார்கள் - அவர்களுக்கு நடந்த 'கெட்ட'வைக்கு நீண்ட ஆயுள் இல்லை. ஆனால் அவங்களச் சூழ்ந்தவர்கள் ("நோயற்றவர்கள்!") தமது குற்ற உணர்ச்சிகளாலும் நேசத்தாலும் குழப்பத்துக்குள்ளாகிறார்கள்... அந்த வகையில ஜோஜோவவிட அக்கா தனது உறவுகளிடமிருந்து பிரிய தங்கை ஒரு காரணமாக இருந்துகொண்டே இருப்பது அவருக்கான நிரந்தரத் தனிமையாக வாழ்க்கைக்கு (தங்கைக்குப் போலவே) நியாயமற்றதாக இருக்கிறது..(இயக்குநர் என்ற வகையில் அபர்ணா சென்னின் இந்தப் படம் கொங்கொனா-காக எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்)

---//அநேகமான - சோகரசம் ததும்பும் - திரையிசைப்பாடல்கள் பெண்களின் துரோகங்களையும் கைவிடுதல்களையும், ஆண்களின் அவலங்களையும் வேதனைகளையும் பற்றி மட்டுமே பேசுகின்றனவே.. //

பொதுவாய் இந்த மாதிரி வெளிப்படையாய் நம்மள வையிற(!) பாடல்கள இலகுவா தாண்டிச் சென்றிரலாம்; உதாரணமா, -எமக்கு எங்களச் சார்ந்தவர்களிடமிருந்தே பாடலின் வரிகளை கேலியாய் கேட்க நேர்கிறபோது (எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?'' போன்ற அருமையான வரிகளை!!) -அதிர்ஷ்டம் இருந்தா எமக்கு அருகிலேயே- ஒரு செங்கல் கிடக்குமானால், அதை எடுத்துக் கொடுத்து 'இந்தா கொண்டே நட்டு வை' எண்டு விடலாம்!! அவ்வளவுதான் - அங்கால ஒண்டுமில்ல.
ஆனா தொ.நாடகங்கள் இந்துத்துவத்தோட/ மதத்தோட பெண்ணை பூஜிக்கிறதா சொல்லிக்கொண்டே அடக்குறது போல- அக்கா, அண்ணி என ஒவ்வொரு 'புனிதமான' உறவுகளதும் -இயக்குநர்களாய் இருக்கிற ஆண்களது உளவியல் விருப்புக்கேற்பவே-('நல்ல' 'பொறுப்பான' 'குடும்பத்தைப் பாக்கிற') இயங்குகிறார்கள். இது குறிப்பிட்ட பாடல் போல இல்லாமல் இடியப்ப சிக்கலாயிருது...குறைந்த பட்சம் இவன் புகழுறானா, இகழுறானா என்பதாவது நம்மளுக்கு புரியோணும் அல்ல?அது தொ.நாடகளங்களில இல்ல; எங்களப் புகழுறதுபோலவே இருக்கு.

இதே தான் இங்க soap operas என்கிற பெயரில் - கிறிஸ்தவ மதப் பின்னணியில - கரு அழிப்பு என்பனவிற்கு எதிராய் கருத்துக்களுடன் போய்க் கொண்டிருக்கு. same concept & same purpose.

80களில கூட சாத்தியமான குறைந்தபட்ச புரட்சிகரமான படங்கள்; (தமிழநாட்டில) பெரியார் போன்றவர்களது கருத்துக்களது தாக்கங்கள் எல்லாத்தையும்; ஒரேயடியாய் அள்ளிக்கொட்டி குப்பையில போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.. 'வயித்தில உள்ளதும் ஒரு உயிர்' எண்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண் சொல்லுவதாய் எடுக்கிற -இண்டைக்கு இப்படி வளர்ந்து போய் இருக்கிற- இந்த தொ-நாடகங்களை என்னதான் செய்ய இயலும்?
ஒரு பெண் பாலியல் வன்முறை என்கிற ஒன்றை தன்மேல் நிகழ்த்தப்பட்ட கோபமும், வன்மும் இருக்கக் கூட அனுமதி யற்று, அப்போதும் வயிற்றில் வளர்கிற ஒரு உயிர் குறித்த 'கருணை' கொண்டடிருக்க வேண்டுமென்பது ஆண் வேண்டும் மனம் அன்றி வேறென்ன?அதிலும் பெண்களது நலத்தை விரும்புகிற உளவியலை மதிக்கிற ஒருவனால் இப்படிச் "சுயநலமற்று" யோசிக்க முடியுமா?

3 Comments:

Blogger ஒரு பொடிச்சி said...

(1)

-பதிவுகள் (www.pathivukal.com) விவாதக்களம் முன்னர் படித்தளவில்- எனக்குத் தெரிந்து (நினைவில் இருந்து) அதில் நீங்கள் ஒரு கருத்துத்திணிப்பிற்கும் ஆட்பட்டதாகவோ UTHR (http://uthr.org)---போன்ற அமைப்பை "நம்பி"யதாகவோ இல்லை. கூல் சகோதர்கள் எங்கிருக்கிறார்கள் போன்றதான (UTHR-குறித்து த.வி.பு.ஆதரவாளர்களிடமிருந்து வருகிற வழமையான) கேள்விகளையே அதில் படித்திருக்கிறேன்.

//இந்த அறிக்கை எழுதுகின்றவர்கள் எல்லாம் எந்தச் சார்பும் இல்லாது இருப்பவர்கள் என்று என்னைப்போன்று நம்பிக்கொண்ட பலரை இவர்களைப்போன்றவர்கள் ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்களை நம்பி மக்கள் போனால், அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை போலத்தான் ஆகிப்போகும்.//"

2004-ஆம் ஆண்டு பதிவுகள் இணையக் களத்தில் உங்களுக்கு UTHR குறித்து இருந்திருக்கக்கூடிய சந்தேகம் (தேவையான ஆதாரம் கிடைத்து) தெள்ளத் தெளிவாக கவிஞர் சேரனால் 2006-இல் போக்கப் பட்டிருக்கிறது; இதில் -லொஜிக்கின் படிக்கு- நீங்கள் நம்பி பின்னர் ஏமார்வதற்கு ஒன்றுமேயில்லை.
நம்பாத (ஃ = சந்தேகித்த) ஒன்றை நம்பிய (ஃ = சந்தேகிக்காத) ஒன்றாகப் போடப்பட்டிருந்ததாலேயே உங்கள் சார்பு குறித்துக் கேட்கத் தோன்றியது, தெளிவு படுத்திக் கொள்ள. அதிலிருந்து சில கருத்துக்களைக் கூற.


(2)
பதிவுகள் (www.pathivukal.com) விவாதக்களம் "வெறுமை"யில் போவதால்,அதை "மீளவும்" -படிப்பதற்கான தேவை இருப்பதுபோல் படாவிட்டாலும்- படிக்கமுடியவில்லை..
இந்தப் பதிவைப் படிப்பவர்கள் எல்லோரும் பதிவுகள் விவாகக் களத்தைப் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் "சில ஆவிகள்" குறித்த உங்களது குறிப்பை புரிந்து கொள்ளல் சிரமமாய் இருக்கும். -அந்த விவாதத்தைப் படித்திருக்கிற எமது- உரையாடல் எமக்கு மட்டுமானதாக இருந்தால் இப்படியான குறிப்புகள் உதவலாம்; அல்லாததால், நீங்கள் இழுக்கிற நபர்கள் குறித்த (எனக்குத் தெரிந்த) முழுமையான பெயர்கள் தருகிறேன்:
குறிப்பிடுகிற "ஆவி" வருகிற, சுபத்திரனின் ஆவி என்றொருவர், அதுபோல "மாற்றுக் கருத்தாளர்கள்" பிரிவில் இணையக் கூடியவர்களாக குருஅண்ணை, விகடகவி என்பவர்கள்.. வேறு பெயர்கள் ஞாபகமில்லை; த.வி.புலிகளின் வன்முறைகள் பற்றி தமது அபிப்பிராயங்களை முன்வைப்பவர்களாக இருந்தார்கள். ஒரு புறம் UTHR இலிருந்து வெட்டி ஒட்டினார்கள்; அந்த 'மாற்றுக் கருத்து" வகைப் பிரிவுக்குள் வராதவர்கள் http://www.tamilnet.com/ இலிருந்து வெட்டி ஒட்டுவது போல இது நடக்கும்.

புலிகளின் ஊடகங்கள்போல ஏன் மாற்றுக் கருத்தாளர்கள் கூறுகிறவையும் தமது சார்பை வெளிக்காட்டக் கூடாது என்கிற கேள்வி சரியாகவே படலாம்-
எனக்குத் தெரிந்து சரிநிகர் போன்றவற்றின் (சந்திரிக்காவுடன் கொஞ்சிக் குலாவியது போன்ற வார்த்தையாடல்களுீடாக நீங்கள் சித்திரிக்கிற) "பின்னணி" தொடர்பாக ஒரு தமிழகப் சிற்றிதழில்கூட சேரனை -புலம்பெயர் யாரோ ஞாபகமில்லை- பேட்டியெடுத்தது 3-4 வருடங்களிற்கு முன்ன படித்தது ஞாபகம்.
---ஒவ்வொன்றினதும் பின்னணிகள் பற்றி விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து (மாற்று) விமர்சனம் இல்லை; அவை வைக்கப்படவேண்டியவையே, சந்தர்ப்பங்களில் வைக்கப் பட்டுமிருக்கின்றன.

ஆனால்
அந்தப் பின்னணியில் - இன்னார் ஆதரவு ஆசாமிகள் இருக்கிறார்கள் என்பதன் அர்த்தம் வி.பு.கள் குறித்து அதிலிருப்பவையை எல்லாம் "பொய்யாக்க" உதவுமென்றாலும், அவை எத்தனை வீதம் "பொய்கள்" என்பதைக் குறித்த உரையாடலே -மக்கள் குறித்த அக்கறையாக - எந்தக் காலத்திலும் முக்கியமானது. அநியாயமாக மனிதர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்பதே -மரணத்தை தவிர்க்க முடியாத யுத்தக்களத்தைத் தவிர - கொலைகளை விரும்பாதவர்கள் செய்யவேண்டியது (அறிக்கைகள் இன்ன பின்னணி என "கண்டபிற்பாடு" முற்று முழுதாக நிராகரிப்பதூடாக கொலைகளை ஆதரிக்காமல்) ... அதுவே "புரிந்து"கொள்கிற, புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் செய்யக் கூடியது.

2002-இல் ஈழத்தில் சந்தித்த அங்கிருக்கக்கூடிய எழுத்தாளர்களிலொருவரே கூட, இது போன்ற அறிக்கைகள் "ஏன் புலிகள் செய்வதை மட்டும் சொல்கின்றன" என்றுதான் கேட்டனரே தவிர, கூல் எங்கிருக்கிறார் என்றோ, அதிலிருப்பவை குறித்த "நம்பகத்தன்மை"யிலோ தொங்கவில்லை (அங்கிருந்துகொண்டே இப்படிக் கருத்து வைத்திருப்பது பெரிய விடயமாகப் படுவதால் சொல்கிறேன்).

"மாற்று" ஊடகங்களின் குரலின் தேவையை எந்தப் பின்னணி சொல்லியும் மறுக்க முடியாது; அமெரிக்க அரசுசாரா நிறுவனங்கள் எனப்படுகிறவை "வளரும்" (எனப்படுகிற) நாடுகளில் செய்கிற சுரண்டல்கள் (தொண்டர்களாக இருக்க (volunteer) பணம் கொடுக்கிற NGO-க்களின் வருகையால் 'சமூக பிரக்ஞை'யுடைய தொண்டர்களது வருகை குறைந்து, பொருளாதாரத்தை முன்னிறுத்திய மாணவர்கள் வருவது போன்றனவில் ஆரம்பித்து) என்பனவை அறிந்திருக்கிற போதும், "மற்றவர்களிற்கு" மட்டும் மனித உரிமை போதிக்கிற சிந்தாந்தத்தில் ஊறிய நாடுகளிலிலிருந்து வருகிற குழுக்களாலேயே( அல்லது குழுக்கலாலும்தான்) ஈராக் சிறைக்கூட சித்ரவதைகளோ, பிற மக்கள் உரிமை மீறல்களோ வெளிவந்தன, வெளிவருகின்றன. அப்படியாக (சிறிய அளவிலேனும்) உலகில் "வெளி"வருகிற உண்மைகளுடைய பின்னணியும் "பிரச்சினை"க்குரியதான போதும், அவையே எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கிறவர்கள் சார்பான தவிர்க்க முடியாத வழிகளாக இருக்கின்றன.

(3)



(4)
நான் எந்த "புதிதாய்" வந்தவர்களுக்கும் எழுதுமளவு அனுபவம் வாய்ந்த, கற்பிக்கும் திறனுடைய "உண்மைகளை" தெரிந்த ஒருவராக என்னை "முடிவு" செய்யவில்லை. அத்தோடு என்றோ ஒரு போழுதும், " ஒரு இலக்கிய/அரசியல் உலகில் புதிதாய் நுழைகின்ற ஒருவளாய் (சரமாரியாக வார்த்தை நளினங்களுக்கும், தத்துவார்ந்த சிக்கல்களுக்குள்ளும் சிக்கிக்கொண்டவளாய்)" நுழையவோ வெளியேறவோ இல்லை.
-எதாலும் நியாப்படுத்திவிட முடியாத - எல்லாவிதமான வன்முறைகளையும் வெறுக்கிற ஒருவராய், சுதந்திரமான இந்த இணையத்தில், "இந்திய நண்பர்களுக்காக" நான் எந்த எந்த உண்மையை "விளக்க" வேண்டுமென்பது பெரும் கேள்வியாக இருக்கிறது (கீழே விரிவாக).
இணையத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போராட்டம் சார்ந்த பிரச்சினைகளை அணுக விரும்பாததாலேயே (மூக்கன் போன்றவர்களின் தளத்தில் நடந்திருக்கக்கூடிய "விவாதம்"(?!) மிகவும் அச்சுறுத்தியதாலும்(எதிர் அர்த்தத்தில்)) பல விசயங்களைப் பேசவில்லையே தவிர அவை குறித்து எனக்கும் "கருத்துக்கள்" இருக்காது என நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!
எனது சார்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள்.
எல்லோருக்கும் தமது சார்பை "வெளிப்படையா"க் கூறுவது சுலபமல்ல என்றால் அதற்கு நிறைய நியாயமான காரணங்கள் உண்டு. சரி அல்லது தவறு என்று இரண்டு பக்கத்தில ஒரு பக்கத்தத் தேர்வது வாழ்க்கையில் சிரமமான காரியம் கிடையாது!

எப்படியோ, எனது சார்பு:
வலைப்பதிவொன்றில் ஒரு ஈழப் பதிவர் ஒருபோது "எமது இராணுவம் விடுதலைப் புலிகள்" என எழுதியிருந்தார்.
அதை முற்று முழுதாக ஒத்துக்கொண்டு, எனது இராணுவத்தின் பிரச்சினைகளை, அதன் மீதான ஆட்சேபணைகளை (யாரோ அல்லது எனக்குப் படுகிறபோது நானேயோ) எழுதுவதும் பேசுவதும் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. அதிலும் --சில உண்மைகளை பேசக் கூடாது -- போன்ற மனத்தடைகளோ சுயதணிக்கைகளோ இல்லாமல் பேச வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது.
அதனாலதான் ஈழம் சார்ந்து -பிற விடயங்கள் போல - தடையின்றி எழுத முடியாமலிருக்கிறது, அதனாலேயே (எழுத வேண்டிய) பல இடங்களில் அதைத் தவிர்த்திருக்கிறேன்.
மற்றபடி, இன்னொரு புறத்தில்,
பாருங்கள், தமிழ் தேசீய ஆண்களின் உணர்ச்சிவசப்படுதல்களுக்குத் தகுந்து (அவர்கள் விரும்புகிற மாதிரி எல்லைக்குள் நின்று) சிந்திக்க முடியாது. (சாத்தியப்பட்டால்!) வருகிற தமிழீழம் ஸோஸலீஸத்தில் கரைந்தொழுகிய சாமான் என தோன்றாததாலும், வர முன்னையே, அவர்கள் செய்கிற காரியங்களைப் பார்க்கிறபோது ஈழத்தைச் சேர்ந்த பெண்ணாய் எழும் ஆட்சேபங்கள் எதிர்ப்புகள் என நிறைய. யுத்த பூமியில் இல்லாத ஒருவராய் செய்யக் கூடியது "நேர்மையாய்" மனித அழிவை அணுகுவதும் அதை எதிர்ப்பதும் மட்டுமே என நினைக்கிறேன். "வந்த பிறகு பார்க்கலாம்" என்ற தேர்வுக்குள் நிறைய கொலைகளை ஆதரிக்கவேண்டுமென்றால் அதை செய்ய விரும்பவில்லை.


(5)
//ஏன் நான் இப்போது சேரனின் வார்த்தைளோடு வருகின்றேன் என்றால் அவர் தனது சரிநிகர் சஞ்சிகையில் இவற்றை -சந்திரிக்காவின் ஆதரவு பின் தளத்தில் இருக்கின்றது என்று தெரிந்துகொண்டே- வெளியிட்டிருக்கின்றார். எவரும் எந்த சார்போடும் இருப்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இந்த ஆசாமிகள் சந்திரிக்காவுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டுதான் இந்த அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள் என்ற உண்மையை வாசிப்பவருக்கு பொதுவில் வைப்பதுதான் பத்திரிக்கை அறம் என்று நினைக்கின்றேன். இன்று புலிகளின் ஊடாக அறிகைகள் வரும்போது பொது வாசகருக்கு இது புலிகளின் அறிக்கை என்று தெளிவாகத் தெரிவதுபோல, அந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் அதன் அடிப்படையில் -அரசு சார்பில் வெளிவருகின்றன என்று கூறப்பட்டு- வெளிவந்திருக்கவேண்டும் என்பதே எனது கருத்து. அதைத் தெரிந்துகொண்டே மறைத்துக்கொண்டு வெளியிட்ட சரிநிகரும், அதைக் தெய்வமந்திரமாக்கி ‘ஆவியாகி’ காவிக்கொண்ட பிற ‘நடுநிலையாளர்களும்’ ஏன் அதை மறைத்தார்கள் என்ற கேள்விகள் முதலில் எழுப்பப்படவேண்டும். //

சரீ..

//புலிகளின் அறிக்கைகள் போல, இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளும் ஏதோ ஒரு சார்பினூடாகவே வெளிவந்துதுகொண்டிருப்பதை மறைத்து, ஏன் தாம் எந்தச்சார்பில்லாதும் இருக்கின்றோம் என்று வேசம் கட்டினார்கள் என்பதே எனது முக்கியமான வினா. மற்றும்படி புலிகளின் அறிக்கைகளிலும், இந்த ‘மனித உரிமை’ அறிக்கைகளிலும் உண்மைகளும் இருக்கின்றன, பொய்களும் இருக்கின்றன என்பதை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் ஏதோ புலிகளின் அறிக்கை எல்லாம் பொய், இந்தா பிடி இந்த மனித உரிமை அறிக்கைகள் ‘மட்டுந்தான்’ உண்மை என்று ஒரு கருத்துத் திணிப்போரை எப்படி ஏற்றுக்கொள்வதாம்?////



ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று யார் சொன்னார்கள்?

யார் ஏற்றுக் கொண்டார்கள்?

நீங்கள் குறிப்பிடுகிற, உங்களது த.வி.புலிகள் மீதான விமர்சனங்களால் இழந்திருக்கக் கூடியவர் போல, நண்பர் என்ற வகையில் உங்கள அறிந்திருக்கக்கூடிய ஒருவரே உங்களது புலி சார்பை (அதுவும் மக்களைமுன்னிறுத்திய சார்பை) புரிந்துகொள்ளாதபோது பிற கருத்துள்ளவர்கள் சமூகத்தில் எவ்வளவு தூரம் அந்நியப்படவேண்டடியதா இருக்கும்? அவர்களை அது இன்னமும் இறுக்கமாக்கவும் இன்னமும் மூர்க்கமாய் எதிர்க்கவும் சொல்லித் தந்தால் அதில் தவறென்ன?
பலரும் சொல்வதுபோல புலிகளை எதிர்க்கிற இணையத்தளங்கள் தங்களது நேரத்தை செலவளித்து "அவதூறுகளை" "புலிகள் தொடர்பான "புனைவுகளை" செய்வதற்கான சமூக உளவியல் பின்னணி என்ன? அப்படியான ச.உளவியலை ஏற்படுத்தியது எது?

இதையெல்லாம் அசட்டை செய்து, வ.கீதா சொன்னதை எப்படிப் புரிந்கொள்வது..?
எட்வரட் செய்ட் போன்ற அறிவுத்தளம் ஏன் எங்களிடையே (ஈழத்தில்) உருவாகவில்லை என்று கேட்ட அவர், முதன்மைக் குணமாக அவர் பற்றி சொன்னதே PLO இன் தவறுகளை கடுமையாக "விமர்சித்தவர்" அவர்களது தவறல்களின்போது அவர்களது கூட்டங்களுக்கே செல்ல மறுத்தவர் இத்தியாதி என்கிற அறிவு நேர்மைகளை முன்வைத்தே. பிழையைப் பிழையென எதிர்த்தல் என்கிற அளவிடலையே அவர் முன்வைக்கிறார். (இதில் மேலுள்ள அநானிக்கு என்ன புரிந்ததென்று அவர் தன்னையும் எஸ்.வீ.ஆர்-ஐயும் சொல்கிறாரா என வினவியிருக்கிறது?)

இங்கே உங்களது நண்பர் உட்பட -எமக்குள்ளேயே- ("ஆங்கிலத்தில் எழுதி வெளியாக்களுக்குச் சொல்லக் கூடாது"என்பதையும் ஏற்றுக் கொண்டு) பேசுவதற்கே தயாரில்லாத பொரும்பான்மை (தமிழ்) அரசியலை பேசாமல் எதிர்ப்பு அரசியலை எப்படி விளங்கி/புரிந்து கொள்வது?

நீங்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்த அளவிற்கே பிரிந்துபோனவர்கள் உங்கள் நேருக்கமான (உங்களை நன்கு தெரிந்த) நண்பர்கள் என்றால் மாற்றுக் கருத்தாளர்கள் இருக்குமிடம் இன்ன பிறவைப் பற்றி அறிவித்தே இருக்கவேண்டும் என எப்படி மிக இலகுவான முடிவுகளுக்கு வர முடிகிறது? அந் நண்பரைப் போன்றவர்களுக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவரது (புலி ஆதரவு நிலையிலிருந்து இறங்காத) கருத்தே "சகிக்க" முடியாமலிருக்கிறபோது பிற பாரதூரமான விடயங்களைப் பற்றி எதைத்தான் பேசி விட முடியும்?

(5)
இதில்
"மற்றதைப் பேசுதல்" குறித்து, உங்களிடம் அதை எதிர்பார்க்கிறேனே இல்லையா என்பதைப் பற்றி கீழே எழுதியிருக்கிறேன். அதற்கு முன் சிறீரங்கன் தொடர்பாக ஒன்று:
சிறீரங்கனுடன் ஒருமுறை மயூரனின் தளத்தில் -பொதுவுடமைவாதம் கதைக்கிற ஆண்களது பெண்கள் குறித்த பொதுமைப் படுத்தல் தொடர்பாக- முரண்பட்டிருந்தாலும் ஈழ அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சிறீரங்கனைவிடவும் ஒருவர் எப்படி நேர்மையாக இருக்க முடியும் என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு.
--படுகொலைகளை விமர்சிப்பார்
---அநாமதேயம் யாரும் இராணுவக் கூலி, "டக்ளஸ்" என்றால் "அந்த எருமையைப் பற்றிக் கதைக்காதீர்கள்" என்பார்
----மீளவும் புலிகளது உரிமை மீறல்கள் பற்றிய செய்தி வருகிறபோது "பாஸிஸப் புலிகள்" எனக் கட்டுரை வரும்...!
(வ.கீதா ஈழத்தவர்கள் ஒரே நேரத்தில் பலவிதமான உணர்வுநிலைகளில் நிற்கிறோம் என்றார். புலிகளை எதிர்த்தால் இராணுவ வன்முறையை ஆதரிக்கப் போகிறோமா?
புலிகளை ஆதரித்தால் அவர்கள் செய்கிற சில உரிமை மீறல்களையும் ஆதரிக்கப் போகிறோமா? புலிகளை விமர்சிப்பது என்பது மற்றவர்களால் பயன்படுத்தப்படுமா? etc என்று.)
சிறீரங்கள் அப்படியாக தனது உணர்வுகளுக்கு நேர்மையாக இருக்கிறார். அவர் எப்படி தனது மக்கள் நலனை இவ் வலை கூறும் நல்லுலகில் 'நிரூபித்து'க் காட்ட முடியும்?


(6)
அப்புறம் "நித்திய காதலன்" என எழுதி நான் "சேரனை நிராகரித்தது" -etc புரிதல் பற்றி:

எனது கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன். சேரன் மீது நானோ/வேறு பெண்களோ வைக்கிற, வைக்கக்கூடிய "நித்திய காதலன்"போன்ற விமர்சனத்தை - நீங்கள் அல்லது வேறு ஆண்கள்- "விமர்சிக்க" முடியும் என்று எனக்குத் தோணவில்லை. நீங்கள் "மூர்க்கமாய்" எதிர்ப்பது அவரது புலி சார்பின்மையை மட்டுமே. இந்தப் பேட்டியில் கூட சேரனின் புலி சார்பை தேனீ பக்கம் "சாட", அந்தச் சார்பும் "காணாது" என்பது தான் மற்றப் பக்க வருத்தமே. தவிர, அப்பால் அவருடன் -ஒரு ஆணாக பிரதிகளிலுள்ள பிரச்சினை- ஒரு பிரச்சினையாகவே இருக்கப் போவதில்லை. இதையே -முழுதாய் பிரசுரித்திராத - எனது விமர்சனத்தில் எழுதியிருந்ததும். ஆண்களிற்கு சேரனுடன் "அரசியலில்தான் முரண்பாடு."
ஆனால்
சேரனை நான் ஃபிற் ஆக்கிக்கொண்டதாய் நீங்கள் சொல்கிற சுவாரஸ்யமான விசயம் எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது.
ஆனால் நீங்கள் "புரிந்துகொண்டிருப்பது" போல "தனிப்பட்ட ரீதியாக" யாரையும் நிராகரிக்கவில்லை.
எனக்கு சேரனுடைய ரெண்டோ மூண்டோ (அல்லது நாலோ ஐஞ்சோ)"கவிதைகள்" பிடிக்கலாம் அதில் ஒன்றை
-சிவரமணிக்கோ பிறவுக்கோ போடுகிறபோது - சடின் பிறேக் போட்டு நின்று, "விமர்சித்தேனே" என்றெல்லாம் மனத்தடைகள் கொள்ளவேண்டுமென்று நினைத்ததில்லை.
படைப்பு ரீதியாக, "பெயர்" என்பது பெயர் மட்டுமே! (வித்தியாசம் தெரியவேண்டுமென்றால் ஒரு கருத்தை எடுத்துப் போடுவது வேறு; படைப்பு வேறு)


(6)
//மேலும், நான் /அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை/யைச் சொன்னதன் காரணம், இன்று இந்த ‘மனித உரிமைவாதிகளும்’ அவர்களைக்காவிக்கொண்டு திரிபவர்களையும் மக்கள் முற்றுமுழுதாய் நம்ப, இவர்களும் புலிகளுக்கு நிகரான அமைப்பாய் மாறினால் மக்களுக்கு என்ன செய்வார்கள்/சொல்வார்கள்? இவர்களுடைய எதிர்கால இலக்குகள்தான் என்ன? என்னவிதமான கட்டமைப்பை மக்களுக்காய் வைத்திருக்கின்றார்கள்? இல்லாவிட்டால்,ஏன் சிங்கள அரசு நல்லாய்த்தானே இருக்கின்றது என்று தமிழ்மக்களின் தலைவிதியை சிங்கள அரசிடம் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? //

ஒன்று இல்லாதபோது அது குறித்த "மோசமான" கற்பனைகளைத்தான் தரவேண்டும் என்பதில்லை! ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறொன்றும் இல்லை என்று ஆ(க்)கிவிட்ட பிறகு, எந்த அறிவார்த்தமான (அறிவு என்றால் "படித்த" என்கிற அர்த்தத்தில அல்ல) ஆய்வுகளூடானதாக அல்லாமல், சும்மா ஒரு ஊகத்தை செய்வது யாருக்குமே பயனற்றது.. ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களால் இருந்தவர்கள் இன்றேன் மாறினார்கள் என்பதற்குக் கூட "வேறு" "மாற்று" அமைப்பு எதுவும் இல்லை = "புலிகளைத் தவிர யாரும் இல்லை" - என்பதே பதில். அத்தகைய பதிலிற்கு ஏதாவது ஒரு முடிவு வரக் கூடாதா என்கிற இழப்புகளைத் தொடருகிற களைப்பினாலும் தான் வருகிறார்கள்.

(7)
//என்னைப் பொறுத்தவரை புலியெதிர்ப்பாளர்கள், சனநாயகவாதிகள் பற்றிய நம்பிக்கை பொய்த்துபோனது சென்ற ஆண்டு நடந்த சிவராமின் படுகொலையை அடுத்துத்தான். எனக்குத் தெரிந்த ‘நடுநிலை’ நண்பர்களில் பாதிப்பேர் இந்தப்படுகொலையை அறிந்து முதலில் கூறியது சிவராம் புலியின் ஆள் ஆகவே அவர் போனது பெரிய விடயமில்லை (இதேயேதான் புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் என்று பிலாக்கணம் பாடும்போது இந்த நண்பர்களுக்கு கோபம் வருவது வேறுவிடயம்). மற்ற நடுநிலைவாதிகள் கூறியது என்னவென்றால், சிவராம் முந்தி புளொட்டில் இருந்தபோது யாரையோ இரண்டு பேரை போட்டுத்தள்ளுவதற்கு உடந்தையாக இருந்தார் ஆகவே இந்தக்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றார்கள். அட நாசமாய்போன்வர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன். இவ்வாறான அதே காரணங்களைத்தான் புலிகள் மாற்று இயக்கதவர்களை போட்டுத்தள்ளும்போது புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வெளிச்சாயம் மட்டும் இந்த இரண்டு தரப்புக்கு வித்தியாசமே தவிர உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது பொதுவான ‘தமிழ்’ இரத்தம் போல.
...மேலும் சிவராம் துவக்கோடு பாதுகாவலர்கள் சகிதம் பிற்காலத்தில் திரிந்தவரும் அல்ல. பேனா ஒன்றை வைத்து எழுதித்தள்ளியதே அவர் செய்த தவறு. இன்னமும் ராஜினி திரணகமவையும் சபாலிங்கத்தையும் போதும் போதும் என்று ஸ்ரிரீரோ ரைப்பாகும் அளவுக்கு விளாசித்தள்ளும் நடுநிலையாளர்கள் இங்கே மட்டும் ஒளிந்துகொள்வதிலுள்ள அரசியல்/விமர்சனப்புள்ளிகளும் சுவாரசியம் வாய்ந்தவைதான் (உடனே இப்படிச்சொன்னதால் மேலே சொன்னவர்களின் கொலையை ஒத்துக்கொள்கின்றேன் என்று விமர்சனக்கத்திகளுடன் நண்பர்கள் வராதிருக்க இறைவன் இரட்சிப்பாராக).
...அதே போல ஒரு ‘மார்க்சியவாதி’ சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய/அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனிதத்தின் அளவீடுகள்தான் என்ன? இவ்வாறான பொழுதுகளில் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு இவ்வாறான் அறிவுஜீவிகள், சன்நாயகவாதிகள் புலிகளுக்குப் பதிலாக களத்தில் நின்றிருந்தால் எங்கள் மக்கள் நிலைதான் என்னவாயிருக்கும். ஏதோ தன்ரை பாட்டில் இருக்கும் மனிதரை எல்லாம் பாஸிஸ்ட் என்று ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் நிகராய் எழுதிக்குவித்தால், இவர்களின் கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் இன்று புலம்பெயர் சூழலில் இருந்துகொண்டு ஒற்றைவரியாவது எழுதும் சுதந்திரம்கூட என்னைப்போன்றவர்களுக்கு இல்லாது போயிருக்குமோ என்ற அச்சம் எனக்கு வருகின்றது. //


உங்களை இறைவன் ரட்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது! எமது மனிதத்தின் அளவீடு "பேயும் இரங்கும் பெண்ணை" (ஸ்டீரியோ ரைப் இல.01) கொன்றதில் ஆரம்பித்து எத்தனையோ அளவீடுகளை கடந்தாகிவிட்டது. (நீங்கள் தருகிற தனிப்பட்ட தகவல்களின் படி) இப்படி வாழுகிற சிவத்தம்பியை எழுதுவது சம்மந்தப்படவர்கள்/அவரை தெரிந்தவர்கள் மனதை வருத்தினாலும், அப்படி ஒருவளு/னுக்கு தோன்றினால் அதை எழுதுவதால் மனிதத்தின் அளவீடு ஒன்றும் குறையாது (சிவத்தம்பியும் ஒத்த அளவீடுகளை செய்திராதவரும் அல்லர்).

உங்களுடைய பதிவில் எனக்கு உடன்பாடற்ற விடயமாக இருக்கிற இன்னொரு விசயம்: மிகை/பொதுமைப் படுத்துதல் சார் குறிப்புகள். சிவத்தம்பியை பாஸிஸ்ட் என்பதால் மனிதத்திற்கு என்ன குறைந்துவிடும்??
நீங்களே, தராக்கி பற்றி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள். "அவர் கொல்லப்பட்டதை எதிர்க்கவேண்டியது முதல்ல முக்கியம்" என்று. அதை நிறுவ, "ராஜினியை சபாலிங்கத்தை போதும்போதும் என்கிறளவு திரும்பத் திரும்ப சொல்பவர்கள்.. இதை சொல்ல முரண்டுவது சுவாரஸ்யம்" என்கிறீர்கள்.

எனக்கும் கருத்துகளை ஏற்க இயலாத அரசியற் கொலைகள் எதிர்க்கப்பட வேண்டியன என்பதுடன் உடன்பாடு உண்டென்றாலும் - ராஜனியும் தராக்கியும் ஒன்றே இல்லை. அதுபோல கொலையுண்டவர்களோ சிவத்தம்பி போன்றவர்களோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமனிதர்களும் கிடையாது (ராஜனியும் தான், ஆனால் இறுதியில் அவர்கள் கொண்டிருந்த சார்பின் நிமித்தம் சந்தர்ப்பவாதிகளையும் கொலைகாரர்களையும் திரும்பத் திரும்ப உன்னதர்களாகச் சொல்லிக் கொண்டிருத்தலை விட, -தனது சமூகத்தின் நன்மையை நினைத்ததைத் தவிர - ஒரு கொலையைத் தானும் செய்யாத ஒருவரை சொல்லிக் கொண்டிருத்தல் -தகுதியான ஒருவரை- நினைவுகூருகிற திருப்தியைத் தருகிறது)

ஃ சந்தர்ப்பவாதிகளை/சந்தர்ப்பவாதத்தை கூற வேண்டுமாயின் தராக்கி போன்றவர்கள் (ராஜனி போலவோ அல்லது அவர் போன்ற ரத்தம் படிந்த கைகள் இல்லாதவர்கள் போலவோ) விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அந்த வகையில "போட்டுத் தள்ளியவர்களுக்கும்" ஒவ்வொரு உயிரையும் (இயக்க வேறுபாடின்றி) மதித்தவர்களுக்குமான வித்தியாசம் ஒப்பிட இயலாதது!

மேலும், கொழும்பில் அரசாங்க ஓய்வு ஊதியம் அற்றிருக்கிற சிவத்தம்பியை யாரும் பாஸிஸ்ட் என எழுதினால் அவர்களது மனிதத்தின் அளவீடை யோசிக்க வேண்டியதன் தார்மீகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை விமர்சிக்கிற மார்க்சியர் யாரும் பிரான்ஸில் இருப்பதால் சொகுசாக இருப்பார்கள் என -தெரியாமல்- ஊகிக்க முடியுமா என்ன? (சிவத்தம்பி என்று இல்லை, பொதுவாக) ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், வயது முதியராக இருந்தால், "இளகியவராய்" இருந்தால் - மனித அழிவிற்கான என்ன கருத்துக்களையும் சொல்லலாம் என "excuse" ஏதும் இருக்கிறதா?

இன்றும், இங்கு பிறந்து வளர்கிற பிள்ளை கூட, சொல்கிற நபர் குறித்த எந்த அறிவும் அற்று "அவ கனக்க கதைச்சவா so they killed her" என்றோ அல்லது இன்னொரு சைட் ஆல "இப்பிடியும் ஒரு கதை இருக்காம்.. இவவ அவங்க கொல்ல இல்ல எண்டு" என்றோ இத்தனை வருசங்களிற்குப் பிறகும் போஸ்ட் மாடம் செய்துகொண்டும்:. உண்மையை ஏற்பதைத் தள்ளிப்போட்டுக் கொண்டும் அதூடா நியாயப்படுத்திக் கொண்டும், ஒரு அர்ப்பணிப்பை (**கொழும்பில வசதிகளுடன் தராக்கி இருந்ததற்கு எந்தவிதத்திலும் ஒப்பிட முடியா) நிராகரிக்க/மறுதலிக்க முடியுமெனில், -இன்னொரு அத்தகைய பெண்ணை- உருவாக்க முடியவிலலை எனில் -- எத்தனை தரம் சொன்னால்தான் என்ன? அதனால் என்ன பிரச்சினை? மனிதர்களைப் "புரிந்துகொள்கிற" உங்களையே இவை உறுத்துகிறபோது உரையாடலை உண்மையில் எங்கு ஆரம்பிக்க வேண்டும்?

(**சம்பந்தமில்லாத குறிப்பு: கொழும்பில் வாழுவது தமிழீழத்தில் வாழுவதை ஒத்த ("சொந்த நாட்டிலேயே வாழும் உறுதி") தியாக மிகுதியானது என்பது எனக்கு புதிய செய்தி!)

(8)

//பாஸிசம் பாஸிசம் என்று புலிகளை நோக்கி அறிக்கை அம்புகள் விடுபவர்கள் இன்னொரு பாஸிச அமைப்பின் மீது நிற்பது குறித்து ஏன் பொடிச்சி உங்களைப்போன்றவர்கள் கேள்விகள் எழுப்புவதில்லை. உங்களுக்கு அக்கறை மக்கள் மீதாயிருந்திருந்தால் முதலாவது கேள்வி அவர்களின் இருப்பு நோக்கியதாய் அல்லவா இருக்கவேண்டும்? இல்லாவிட்டால் ராம்.மாணிக்கலிஙமும், மற்றவர்களும் அப்படி இருக்கவில்லை என்று எங்கையாவது ‘ஆதாரமான’ செய்திகளைக் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டீர்களோ தெரியவில்லை.//

எனது முடிவுகளை - நான் எங்கு கேட்டு "அமைதியாகவேண்டும்' ?. வீட்டில் இருக்கிற -காதலன், அப்பா, அண்ணா போன்ற -ஆண்களிடமா?!

"பழைய போராளி" "இன்றைய புலி சார்பு" அப்புறம் அதி தீவிரமான(!) புலி எதிர்ப்பு என ஆண்களைத் தெரிந்திருக்கிறபோதும், வ.கீதா சொன்ன மாறுபட்ட மனோநிலைகளோ என்னுடைய -தனிப்பட்ட - யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்த இன்றைய புலி ஆதரவாளர் கூட ராஜினியை தராக்கியை மாறுபடுத்தியே பார்க்கிறார்கள்; ராஜினியை எத்தனை தடவை கூறினாலும் "போதும்" "போதும்" என அலுப்புறுவதில்லை.

மற்றப்படி, பொதுவாக ஆண்களைப் போல எதையும் "நிறுவவோ" "ஆதாரம்" தேடவோ இது எனது வாழ்க்கை பிரச்சினை அல்ல. இங்கிருந்து கொண்டு "எனக்கொரு நாடு வேண்டும்" என அங்கொரு நாட்டை நினைக்கிற அபத்தத்தை (பக்கா சுயநலத்தை) கடந்து, இங்கு பெற்ற அறிவுடன் அங்கு நடக்கிறவை தொடர்பாக "எனக்கு தெரியிற" உண்மைகளை பேசுவதே சரியெனப் படுகிறது.

மக்களது இருப்பை நிர்ணயிக்கிற பெரும்பான்மை அரசியலை உடைய நீங்களே -ஏதும் ஆழமாய் உரையாட முன்னரே- எனக்கு 'ம்" போடுவதாய் எழுதுகிறீர்கள்.

நான் எழுதியதோ, எழுத நினைத்ததோ நீங்கள் ம் போடுவது தொடர்பானது அல்ல்; தனிப்பட்ட எனக்கு யாரும் "ம்" போடுவதால்தான் என்ன பயன்?!

உங்களது கருத்துகளிற்கு உடன்பாடல்லாத விசயங்களை -எனது கருத்துக்களை- எழுதுவது "பிரம்பெடுத்துக்கொண்டு" "போதிக்க" வருவதுபோல இருப்பது (முன்னர் ஒரு "மாற்றுக் கருத்து" ஆணொருவரும் ஒத்ததையே சொல்லியிருந்ததில்) ஆண்களிற்கு பெண்களிடம் கருத்து இருப்பதும் கருத்து சொல்வதும் அப்படித்தான் தொனிக்கிறதா??? உங்களைப் போல தமிழ்நாட்டு நண்பர்கள் "விளங்கிக்கொள்ள" என்றெல்லாம் கூட நான் அரசியல் பிரச்சினைகளை எழுதாதபோது, அது, எப்படி பிரம்போடு போதிக்க வருவதாய் தென்படுகிறதோ!

இதை "ஆணீய" சிந்தனைகளையும் விமர்சிப்பவராகிய நீங்கள் யோசித்துக் கொள்ளலாம். யோசிக்கிறீர்களோ இல்லையோ,

இலங்கையில் நடக்கிற சம்பவங்கள் குறித்து ஆண்கள் நீங்கள் நான் என்ன நினைக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதைத்தான் எப்போதும் நானும் நினைத்தாகவேண்டும் என்று இல்லை என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.

(9)

மற்றது,

(பெயர் சொல்லி எழுதல் தொடர்பாக)

கவிதையைப் பற்றி என்று சொல்லவில்லை,(எழுதுகிறபோது கவிதையில் "திசைகள்" எங்கும் அலைந்துதிரியும் என்பது அப்போதுதான் திசைகள் சேரனது பேட்டியைப் படித்திருநததால் தோன்றியது - புஸ்பராஜா பேட்டியோட வரிகள் அப்படித் தோன்றவில்லை- ஆதலால் அதை குறிப்பிட்டிருக்கலாமே என்று நினைத்ததை எழுதினேன். ஆனால் அது எழுதுபவருடைய தேர்வுதான். . (அதுக்காக ஒருவரது கருத்தை எதிர்ப்பதை கவிதையில் கொணர்ந்து கட்டுரையாக்கோணுமென்பதில்லை, அடிக்குறிப்புப் போடலாம்! சண்முகம் சிவலிங்கம் தொடங்கி அடிக்குறிப்புக் கவிஞர்கள் பாரம்பரியம் ஈழத்திலுமுண்டே.. ) அனேகமாக அதன் பிறகான உங்களது பின்னூட்டங்களையும் வைத்துத்தான் எழுதினேன்; இந்தப் பதிவில கூட சிவத்தம்பியைப் பற்றின "மார்ச்சியக்"கட்டுரை (றயாகரன் என நினைக்கிறேன்)etc என்று அவர்களது இருப்பை -அவர்களது பக்கத்தை- (உங்களுடைய தேர்வுதான் என்றாலும்) -பெயர் எழுதாமல்- அலட்சியம் செய்வதுபோலவே எனக்கு தொனிக்கிறது. அது disturb பண்ணுவதால்தான் எழுதினேன். நான் பெரிதும் சொல்ல வந்தது அப்படியாக "பெரிய கட்டுரை எழுதிறது" ---- "நான் மதிக்கிற ஒருவர்" இப்படி எல்லாம் எழுதப்படுவது ஒரு நபர் குறித்த "ஊகங்களை"ச் செய்யவே தூண்டும் என்பதைத்தான். அது உங்களது தேர்வு சம்மந்தப்படடது; அது அவசியமில்லை என நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்றால் அது சரிதான்.அதில் எதிர்க்கருத்து இல்லை.

முக்கியமாக இங்கே எழுத விரும்புவது (உறுத்தலல்ல) :-

உங்களுடைய குறிப்பிட்ட (மேலுள்ள) கவிதைக்குப் பிறகு வந்த பின்னூட்டங்களில் -

நீங்கள் மாற்றுக்கருத்தாளர்கள் பற்றி நிச்சயமா ஏதோ சொல்ல, அதற்கு பதில் சொல்ல வந்த சி.ரங்கனிடம், மேலுள்ள கவிதைக்கு (இத்தனை தரம் வந்து பார்த்திருக்கிறீர்கள் என்ற ஸ்ராற் கவுன்ரர் தகவலுடன்) (ஒரு பெண் வன்புணரப்பட்ட சம்பவம் குறித்து உங்களுக்கு ஒன்றும் சொல்ல இல்லை நீங்கள், ஆனால் மாற்றுக் கருத்தை சொன்னதும் பதில் எழுதுகிறீர்களே.. என்றதுவரை அந்த ஸ்ராற் கவுன்ரர் முதலாய விடயங்களுடன் (நானுங்கூட நிறையத் தடவை வந்து பார்த்திருப்பேன், அதுக்கென்ன?? என்கிற அடிப்படையில்) சேர்த்துத்தான் ஆட்சேபித்து எழுதத் தோன்றியது. ஒருவரை "வேவு" பார்த்து "ஏன் இதற்கு எழுதாமல் அதற்கு எழுதினாய்" எனக் கேட்பது "மற்றதை"க் குறித்ததில்லியா? என்கிற அடிப்படைகளில். (இவ்விடத்தே "மற்றது" குறித்த அனைத்து அபிப்பிராயங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.)



அதே கேள்வி திரும்ப என்னிடம்!

//இங்கே ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கப்பட்டாள் என்ற விசயத்தை விடவும், உங்களுக்கு ‘நடுநிலையாளரை’ போட்டு அடித்துவிட்டான் என்ற முதலில் கோபந்தான் வருகின்றது. இதைத்தான் மேலே சொன்னேன், கொலையோ, வன்புணர்வோ விமர்சனங்களை மீறி முதலில் கண்டணஞ் செய்யுங்கள். அதுதான் குறைந்தபட்ச அறமாய் இருக்கும். அதைத்தான் அனைத்து விமர்சனங்களை மீறி முதலில் நாமனைவரும் செய்யவேண்டியது. நீங்கள் அதற்கு ஒரு சிறு கண்டனம் -இப்போதுகூட- கூறாது நடுநிலையாளருக்கு கவசமாக, சரியாகத்தான் பிரயனத்தப்படுகின்றீர்கள். நல்ல விசயந்தான். மனதில் எது உறுத்திக்கொண்டிருக்கின்றதோ அதுதானே முதலில் வரும். பரவாயில்லை அங்கே சிறிரங்கனோ அல்லது வேறு யாரோ கிட்டத்தட்ட இதேமாதிரி கேள்வியோடு ஒடிவந்தார்கள் என்று நினைவு. இப்போது காலம் தாழ்த்தி ‘நடுநிலையாளர்களின் மானம்’ காக்க நீங்கள் ஓடிவருகின்றீர்கள். அவ்வளவுதான். மற்றும்படி உங்களின் விமர்சனங்களைத்தாண்டி நான் ‘கவிதை’ என்று எழுதி அங்கேயெழுப்பிய கேள்விகளில் நியாயம் உள்ளது என்று இப்போதும் உறுதியாக நம்புகின்றேன். //


மேலே சொன்னதுபோல, உங்களது கவிதை பற்றி அதில் நீங்கள் எழுப்பிற கேள்விகள் குறித்து இங்கு நான் ஒன்றும் சொல்லவில்லை. அது நிச்சயமாக உங்களுடைய உணர்வுகளுக்கு உண்மையானதாகவே இருக்கும்.

ஆனால் உங்களது கவிதையைப் படித்துத்தான் நான் ஒரு பெண் வன்புணரப்பட்ட "விசயத்தை" பொருட்படுத்தவோ, அல்லது "கண்டிக்கிறேன்" என -இப்போதுகூட - உங்களது தளத்தில் கண்டனமோ ஆட்சேபனையோ செய்தால்தான் **அவளைப் பற்றி நான் உணர்வதை நீங்கள் அப்றூவ் பண்ணுவீர்கள் என்பதோ அதிகாரமாக இருக்கிறது எனக்கு. அது போன்ற தொனிகளையே இங்கே உங்களிடம் முரண்பாடாய்க் காண்கிறேன். அந்த, எது மக்களுக்கானது, எது (தனிப்பட்ட)கருத்துக்கானது என்பதை நிர்ணயித்துச் சொல்கிற "இடத்தில்" இருக்கிற ஆதிக்கத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

(**இந்த இடத்தில் 'பெண்கள்தான் தமது பிரச்சினைகளை சொல்ல" "தலித்கள் தான் தமது தலித் பிரச்சினைகளை சொல்ல - என்கிற வகையான நம்பிக்கைகளை நினைவு கூரப் பாருங்கள்). அத் தொனிக்காக யாருக்கும் எனது "எதிர்ப்பை" "கோபத்தை" "மனிதாபிமானத்தை" "தோசாபிமானத்தை" "கருணையை" "காட்டிக்கொள்ள"வேண்டிய அவசியம் இவவிடம் இல்லை;

இங்கே - நான் தனியே தொடரும் இராணுவப் படுகொலைகள் பற்றி மட்டுமல்ல, தர்சினியைப் பற்றியோ, கிழக்குப் படுகொலைகள் பற்றியோ, தற்கொலைக்குண்டுதாரி கர்ப்பிணி(கேள்விக்குறியைப் போட்டும் விலக்கியும்), லீலாவதி (கீழே வரும்) பற்றியோ எழுதவேவயில்லை. நீங்கள் வெருகல் ஆற்றைப் பற்றி ஒரு குறிப்புக் கூற மட்டும் அந்தக் கவிதையைப் போட்டதன் "அச்சொட்டான" காரணத்தை -உங்களவுக்கு - நான் அறிந்திருக்கவில்லை என்பதை(யும்) வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது (அதேபோல சேரனின் கவிதை போட்டது தொடர்பான புரிதல் குறித்தும் கீழே).

ஈழப் பிரச்சினை தொடர்பாக, அங்கு நிகழுகிறவை தொடர்பாக உடனடிஉடனடியாக தோன்றுகிறவையை குறிப்புகளாக எழுதலாம், ஆனால் குறிப்புகளைத் தாண்டி ஏதாவது எழுதுவதையே விரும்புவதால்-

எனது வலைப்பதிவில் -அதுவும் தமிழில்- நான் யாருக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்? எனது மனத் துக்கத்துக்காக ஒன்றை எழுதுவேனாயின் அதை பிரசுரிக்கிற தேர்வு யாருடையது? என்பன பற்றி விரும்பின் யோசிக்கலாம் (நீங்கள்). இராணுவம் செய்கிற வன்முறைக்கு நான் ( அல்லது சிறீரங்கன்) வந்து கருத்து சொல்லி என்னை காட்டிக்கொண்டே ஆகவேண்டும் என்கிற உங்களது சிந்தனை -அந்த மனோநிலை- பிரச்சினையே அற்றதென்கிறீர்களா? யாருக்கு யாரை (ஏன்) நிரூபிக்க வேண்டும்?

இத்தகைய யோசனைகளுடன்தான் - நான் எனக்கு தோன்றுகிறதை ஆறுதலாகவே எழுதிக் கொள்ளலாம் - என்று இருக்கிறேன்.இதனால் என்னைப் போல ஒருவருடைய சார்பு சர்ச்சைக்குரியதோ சுவாரஸ்யமோ அற்றது!

அப்பாவி சிறீரங்கனிடமோ அல்லது பாவிகளிடமோ தர்சினியைவிட மாற்றுக்கருத்து முக்கியமா எனுகிற உங்களிடம் ("மற்றது" குறித்த ஒத்த கேள்வியை) இப்படிக் கேக்கலாம்:-

அதே காலம் தேனீயில் மட்டும் "புலிச் சாயல் பூசியும்" நிதர்சனத்தில் ஒழுக்கமற்ற பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டிருந்த லீலாவதி என்கிற ஒரு பாலியல் தொழிலாளியின் மரணம் (80களில் இயக்கங்கள் "சுடப்"பழகிய மனநோயாளர்க்ள, பாலியல் தொழிலாளர்கள் - இலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல்) தமிழ் ஆண் தனத்தை தன்னுடையஉறுப்பை வெட்ட வக்கில்லாத கேவலத்தை மீள நிரூபித்து சென்றிருந்தது.

இச் சம்பவம் குறித்து - குறிப்பிட்ட பெண் குறித்து - உங்களைக் கவிதை எழுதக் சொல்லி ("மற்றதை" ப் பற்றி எழுதச் சொல்லி) -நீங்கள் அப்படி நான் சொல்லுவதாக நினைப்பதுபோல - நான் சொல்லவில்லை.

தமிழ் தேசீய ஆண்மகனை, "அந்நிய" இராணுவத்தால் ("சிங்களவனால்") தனது இனப்பெண் வன்புணரப்பட்டு கொலையுண்டது "கொதிக்க" செய்வதுபோல, ஏதோ ஒரு சாராரால் லீலாவதியின் கொலை உரிய கண்டனத்திற்கு உள்ளாகிற சூழல் இருக்கவே என்னைப் போல ஒரு பெண் விரும்புவாள் (கவனியுங்கள்: அதுகுறித்தும் பதிவோ கவிதையோ நான் எழுதவில்லை). ஒரு பாலியல் தொழிலாளி (இள வயது அல்லாத, பிள்ளைகளுக்குத் தாயான) "எனது இன" ஆண்களால் கொலைசெய்யப்படுதல் -எந்தவிதத்திலும் தர்சினியின் இழப்பிற்கு மேலான துயரமோ குறைவானதோ அல்ல. ஆனால் எ/உங்களுடைய ஊடகங்களில் எதில் அது -முன்னதற்கான நியாயமான எதிர்ப்புகளுடன்- பதியப்படுகிறது? இதுவரை எழுதப்பட்டுள்ள - புலிகள் சார்பான அல்லது பெண்ணிய பதிவுகளில் தானும் -தர்சினி போல - லீலாவதி குறித்து இருந்ததா?

(நீங்கள் படிக்காத) "தேனீ"யில் இணையத்தில் நிதர்சனத்தில் சிறு செய்தியாக வந்த "ஒழுக்கமற்ற" இந்தப் பெண்ணைப் பற்றி தமிழரசன் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை (பிற எந்த மாற்றுக் கட்டுரையும்) முழுமையானதாக இருக்க வேண்டியதில்லை; தவறற்றோ விமர்சனமற்றோ இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறது. சார்புடைய கவிஞன்கள் (கவிஞைகள் உட்பட) காணாத/பாடாத ஒருத்தியைப் பற்றியது. அத்தகைய பக்கத்தை, ஒரு "நியாயமான" பக்கத்திற்கெதிரானதான இன்னொரு பக்கமே -தனது நலன்களின் பொருட்டு - முன்னிறுத்துமாயின் -எந்த நலன்களையும் விலத்தி- என்னைப் போன்றவர்களுக்கு அத்தகைய ஊடகங்களின் "இருப்பு"ம் தேவையும் முக்கியமானதாய் இருக்கிறது. அதை "புனைவு" என்றோ "படிப்பதில்லை" என்றோ சொல்வதை விட அதை முன்வைத்து - அதன் விசயங்களை முன்வைத்து - பெரும்பான்மை ஊடகங்கள் பேசாதவையை முன் வைத்து பேசுதல் முக்கியமா இருக்கிறது.

உங்களை கவிதை எழுத சொல்லவில்லை. ஆனால் "தேனீ' எல்லாவற்றுக்கும் புலிச் சாயல் பூசுகிறது என (லீலாவதியின் மரணத்தைவிட "முக்கியமானதாக") நீங்கள் சொல்லலாம் - ஆனால் தமிழ் ஆண் எந்த இயக்கமென்றாலும் இதைத்தான் செய்வான் என பூசி மெழுகலாம். ஆனால்

எங்களுடையதென தற்சமயம் இனியும் இருக்கப் போகிற ஒரு இராணுவம் (நன்றி: அந்த வலைப்பதிவர்)

முக்கியமாக பெண் உடல் மீது அத்துமீறலை நிகழ்த்தும் சிங்கள/இந்திய/பிற இராணுவங்கள் அல்ல (- "இராணுவங்கள் "கற்பழிப்பது இயல்பு" - புஸ்பராஸா)

எமது, எங்களுக்கான இராணுவம்

அதுவும் எங்களை அடித்தால் தனது காமத்திற்காக உருவாக்கிவிட்டு கொன்று போட்டால், அதைப் பற்றி ஆண்களிற்குப் பிரச்சினை இருக்கப் போவதில்லை. இந்த தொழிலாளி போனால் இன்னொருவர்.

இத்தகைய ஒடுக்கப்பட்ட பேசப்படாத -முக்கியமற்ற - குரல்கள் குறித்தும் எழுத யாரோ என்றாலும் வேண்டும்.



(10)

//சரி எல்லாவற்றையும் போதிக்க நீங்கள் பிரம்போடு வெளிக்கிடும்போது இன்னொரு ‘ம்’ போட்டு நீங்கள் கவிதை குறித்தும் கவிதையின் அறம் குறித்தும் போதிப்பதை கேட்கவேண்டியதுதான். இதில் நகைச்சுவை என்றால் அவரின் பாதிப்பு இவரில் இருக்கின்றது இவரின் பாதிப்பு இன்னொருவரில் இருக்கின்றது என்ற கவிதை விமர்சனம் எழுதி பிச்சுப்பிடுங்கிற நீங்களே பெயர்களைக் குறிப்பிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வரைவிலக்கணம் தந்து அறம் எங்கே என்று வினாவுவதற்கு…. இன்னொரு ‘ம்’.

இப்போது உங்களின் ‘·பிற்’ உண்மையை பாவிக்கும் சூழல் குறித்து…. நீங்கள் சேரனை நித்திய காதலன் என்று நிராகரித்து ஒரு விமர்சனக்கட்டுரை எழுதிவிட்டு, பிறகு உங்களுக்கு ‘·பிற்றாகின்ற’ சேரனின் ஒரு கவிதையை -சிவரமணி பற்றிய எழுதிய- எந்த விளக்கமும் இல்லாது உங்கள் பதிவில் பிறகு பிரசுரித்துள்ளீர்கள். நீங்களும் தொப்பிக்கேற்றமாதிரி ‘·பிற்றான’ கவிதை போடுகின்றீர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். என்னாலும் -உங்களைப்போல- சேரனை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது. சேரன் அல்ல, எந்தப்படைப்பாளியையும் விமர்சனங்களுடன் உள்வாங்கிக்கொள்கின்றேன். அவ்வளவுதான்.//


-நான் மட்டும்- இன்னாரை விமர்சிக்கவில்லை,நிராகரிக்கிறேன் என எப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?

நடுநிலமையாளர் (அதாவது இங்கே "திசைகள்" என எழுதுவதுதொடர்பாக எழுதியது) சேரனைப் பற்றி எழுதுவது "பொறுக்க முடியாமல்" இருந்தால் நான் ஓடிவந்த வேகத்தில் - கவலைப்படாதீர்கள்- பதிவுச்சொல்எல்லாம் இட்டு அன்றே அதற்கான ஆட்சேபணையைத் தெரிவித்தே இருப்பேன்! ஒன்றும் அவரசமில்லை!

ஒருவரைப் பற்றி விமர்சித்த பிறகு அவர்கள் குறித்ததாய் -படைப்புகள் தவிர - எதையும் கொண்டு திரிவதில்லை. நீங்கள் கூறுகிற நிராகரிப்பு நிகழ்ந்திருந்தால் அந்தப் படைப்பு அங்கே போடப்பட்ருக்காது! நாங்கள் விமர்சிக்கிறவர்கள் தொடர்பான கற்பிதங்களைக் கொண்டிருக்கிறோம் என்றால் அது அவர்களது தவறாகத்தர்ன இருக்க வேண்டியதில்லை. ஏனோ சேரனது கவிதையைப் போட்டது தொடர்பான உங்களது தொனி (நான் கேட்டதற்குப் பதிலுக்கு என்னிடம் கேட்பதாய் அமைந்திருந்தாலும்) -எழுதிய விமர்சனத்தை விட்டுட்டு - 'சேரனுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா" எனக் கேட்கிறவர்களுடைய தோரணையையே நினைவூட்டியது.

அத்தகைய சுவாரஸ்யம் தேடும் நோய்க் கூறுகளிற்கு ஒன்றும் செய்ய முடியாது.

நான், ஒரு உரையாடலை (விமர்சித்த) அவர்கள் தொடர்பாக, எதையும் - குறித்த விமர்சனத்தை முன்வைத்த விவாதத்தை- ஏற்படுத்த விரும்பின் அவர்களது படைப்புக்களை உள்ளிடுகிறேன்.

மற்றப்படி, சக்கரவத்தியின் கவிதை -தர்சினியின் கொலைக்க முன்பாகவே- நிகழ ஆரம்பித்த கிழக்குப் படுகொலைகள் பற்றியது, -கவிதை என்கிற ரீதியில் அதப் பார்க்க முடியா/அப்படி என்னால் சிலதைப் பார்க்க முடியாது. அந்தப் பிரதியோட பின்னணி, குரல்- அது நிரம்பவும் பாதித்தது, எனது சகோதரனுடன் நடந்திருக்கக்கூடிய நிலப் பரப்பில், ஒவ்வ்வொரு நாளும் எதுவுமறியாத பிள்ளைகள் இரண்டு தரப்பு மோதலில் அநியாயத்துக்கு பலியாவதும்-

அங்கிருந்து வந்திருந்து ஒரு களச் செயற்பாட்டாளர் "ஒரு நாளைக்கு ஒரு கொலையாவது விழும்" என்று சொன்னதும் தந்த தாக்கத்தை நிரப்புவதாக இருந்ததாலும் - அது தொடர்பாக ஏதும் எழுதலாம் என இருந்து பிறகு எழுத முடியவில்லை ஆதலால்- பிறகு அதை முன்வைத்து எழுதலாம் என்று ("பலிவதம்" கவிதை) உள்ளிட்டிருந்தேன். உங்கட பதிவில வந்து பின்னூட்டம் இடுகிறபோது அது நினைவில் இல்லவே இல்லை. அப்படி எல்லாம் யாருக்கோ பதில் சொல்ல அற்ப சந்தோசங்களின் நிமித்தம் எல்லாம் அதைப் போடவில்லை (கவிதை யாரையும் தாக்கினால், அது நிச்சயமா கவிதையோட அரசியல் தாற தாக்கம்தான், அது எனக்கு உடன்பாடானதும்தான்).

மற்றது, நீங்கள் குறிப்பிடுகிற "3" கவிதைகளை எடுத்துப் போட்டு நர்ன எழுதியது கூட "விமர்சனம்" அல்ல. அது ஒரு வாசிப்பின் தொடர்ச்சியான சிறிய அவதானம் மட்டுமே. கவிதை குறித்த எனது பதிவுகளில் "கவிதைக்கு வலைவிலக்கணம் விற்கிறேன், வாங்குங்கள்" என்று சொன்னதில்லை! எனக்கு "கவிதை" என்பது தொடர்ந்தும் ஒரு மிகப் பெரிய பகடியாகவே இருக்கிறது, இருப்பு சார்ந்த கவிதை அல்ல. பிற பிற! கவிதை குறித்த உரையாடல்கள், கவிஞன்கள் (கனவான்கள்) மனுசனாய்க் கூட இருக்க முடியாதவன்களது உன்னதங்கள் எண்டு, அது ஒரு தொடர் பகடியே. இங்க எழுதிய எந்த விசயததிலும் முக்கியமானது அல்ல.



//.மற்றும்படி ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் அடிக்குறிப்பிட்டு நான் புலிச்சார்புடையவன் என்று எழுதிக்கொண்டிருக்கவேண்டுமா என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களோ தெரியவில்லை. //



உங்களுடைய சார்பு என்பது அல்ல, நான் "தேனீ" படிப்பதில்லை போன்ற ஸ்டேட்மன்ற் உடன் எப்படி -நீங்கள் விரும்புகிற - அறிவுத் தளத்தில் உரையாட முடியும் (இதே கேள்வியை யாரும் தமிழ்நெற் படிப்பதில்லை என்றாலும் கேட்கலாம்) போன்ற கேள்விகளின் அடிப்படையிலிருந்தே தோன்றுகிற எனது கருத்துக்களை வைக்கிறேன். இன்ன பக்கத்திலிருந்துதான் நேர்மையான அறிவுஜீவிகள் வருவார்கள் என்பதெல்லாம் அளவீடு கிடையாது. உண்மையில் வ.கீதாவின் அவதானம்போலவே -நேர்மையாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள்- ஒரே உணர்வுடன் இருத்தல் என்பது சிரமமானதே. (அதை முதலில் புரிந்தும் ஒத்தும கொள்ள வேண்டும்.)

எனினும், வெளி இடங்களில் இருந்து, எல்லா ஊடகங்களையும் "பக்கங்களையும்' வாசிக்க முடிகிறவர்களால் -

"மற்றவர்களை" விளங்கிக் கொள்ளுதல் என்பதைச் செய்யிறதைத் தவிர பெண்ணியம். தலித்தியம் இன்ன பிறவென கதைப்பவர்கள் செய்யயற்கரிய விசயம் ஏதும் இல்லை. எனவே நீங்கள் எல்லோரையும் விளங்கிக் கொள்ள விரும்புதல் என்பதையும் அவ்வாறே பார்க்கிறேன்.

ஆனால் உங்களது அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களது பதிவுகளில் -நடக்கிற வன்முறைகளிற்கு - கண்டனங்களைத் தெரிவிப்பதூடாகத்தான் ஏதோ வகையில் "மற்றவர்களுடைய" மக்கள் மீதான அக்கறைகளும் கருணையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற வகையில் எழுதுவதூடாக அது சாத்தியப்படுமா என்று யோசிக்க தோன்றியது.

எனக்குத் தோணுகிறவையை தெளிவாக எழுத முடிந்ததா தெரியவில்லை; முடிந்தவரை தோணுகிறவற்றை எழுதியிருக்கிறேன். கருத்துப் பரிமாற்றமாக இருந்தால் -தேவையெனில்- தொடரலாம்.

அப்புறம், கார்த்திக்: மேலே கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை; குறிப்பிட்ட கேள்விதான் உள்ளது. இதில் நீங்கள் என்னுடன் முரண்படுகிற இடத்தை எழுதினால், தொடர்ந்து விவாதிக்கலாம், அது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்!
---பொடிச்சி



//ஆனால் விமர்சனம் என்பது உணர்ச்சிகளைத் தாண்டி அறிவுத்தளத்துக்கு நகரவேண்டும் என்பதே என் அவா (அது வ.கீதாவின் உரையைக் கேட்டதும் இன்னும் வெளிக்கிளப்ப அதைப் பதிவாய் இங்கே எழுதினேன்). இன்னும் ஏன் புலியெதிர்ப்பாளர்களை நோக்கித்தான் கேள்விகளை எழுப்பினேன் என்றால் அவர்களினூடாகத்தான் நம்பிக்கை அளிக்கும், அடுத்த கட்டத்துக்கு நகரும் அறிவுஜீவிகள் வருவார்கள் என்று -என் புலிச்சார்பின் ஊடாகக்கூட- இன்னும் நம்புகின்றேன். அந்தவகையில், இப்படி குண்டுச்சட்டிக்குள் நின்றுகொண்டு புலி எதிர்ப்பை மட்டும் செய்வதால் நீங்கள் சாதிக்கப்போவதில்லை எதுவுமில்லை என்ற ஆதங்கத்தில் அவர்களை நோக்கி நான் விமர்சனம் வைப்பது எனக்கு என்னளவில் மிக அவசியமாகின்றது.

அதேபோன்று நான் புலி ஆதரவுப் பிரச்சாரங்களினூடாக சுபத்திரனை விளங்கிக்கொண்டேன். அப்படியே தராகியை புலி எதிர்ப்பு ஊடகங்களினூடாக விளங்கிக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டு பேரும் முக்கியமானவர்களே, துரோகி-பாஸிஸ்ட் என்ற வார்த்தைப் பிரயோகங்களை மீறி நான் இவர்களை மட்டுமல்ல எல்லோரையும் விளங்கிக்கொள்ளமுயல்கின்றேன். அவ்வளவுதான்.//

12:44 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

test

12:06 PM  
Blogger ஒரு பொடிச்சி said...

http://oorodi.blogspot.com/2006/09/blog-post_27.html
முந்தி முந்திக் காலத்தில நாங்க சின்னப் பிள்ளையளா இருந்தபோது சிறுகதைகள் எழுதும் பழக்கம் ஊத்தவாளிப் பழக்கம் ஒன்று இருந்தது. ஒரு இடத்தை பழகும் முன்னரே இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது (ஒவ்வொரு ஒவ்வொரு வீடு வீடா மாறுற போது)ஏற்படுகிற பிரச்சினையை வச்சு கதை எண்டு எழுதினேன். தலைப்புக்காய் -

அப்ப உங்கள மாதிரி நான் சிந்தனா செய்யாட்டியும், நான் "நாடோடிகள்" என்று வைக்க நினைக்க பக்கத்தில இருந்த அறிவான தோழி "வீடோடிகள்" என்று வைக்குமாறு பரிந்துரைத்தா :-)
பிறகு, கதை வெளிவந்ததா இல்லியா என்பது தெரிஞ்ச விசயம் தானே!! ஆனா "தெளிந்த" விசயம்:
நான் ஒரு வீடோடி!
எனவே,
Welcome ஊரோடி..

நீங்க போட்ட கவிதை படிக்கிறபோது வருகிற ஒன்று:

குழப்பம்

அவளுக்கு மனதில்
அவனுக்கு மூளையில்
பரப்பிக் கொன்றார்கள்


;-)

11:51 PM  

Post a Comment

<< Home

Free Web Page Hit Counters
lasik uk