Thursday, March 30, 2006

குட்டி ரேவதி. interview feb 2006

புதிய உத்வேகத்துடனும் ஒரு இயக்கமாகவும் தமிழில் கவிதை எழுதத் தொடங்கியுள்ள பெண்ணியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் குட்டி ரேவதி. 'பூனையைப் போல அலையும் வெளிச்சம்!' 'முலைகள்', 'தனிமையின் ஆயிரம் இறக்கைகள்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'பனிக்குடம்' என்ற பெண்ணியச் சிற்றிதழையும் தொடங்கி நடத்தி வருகிறார். 'முலைகள்' தொகுப்பு வெளியான போது, தலைப்புக் காரணமாக மிகுந்த சர்ச்சைக்குள்ளானார். அன்று தொடங்கி சமீபத்திய 'சண்டக்கோழி' சர்ச்சை வரை பல சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டது. ஆனாலும் சர்ச்சைகள் குறித்த கவலை கொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வரும் குட்டி ரேவதியின் பங்களிப்புகள் தமிழில் பெண்ணிய சிந்தனைகளையும் செயல்பாட்டையும் வளர்த்தெடுப்பதில் முக்கியமானவை.
தீராநதி: உங்கள் கவிதையில் அதிகமும் நீங்கள் கவனப்படுத்த விரும்பும் விஷயம் என்ன?
குட்டிரேவதி: ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு, ஒரு பெண்ணிடமிருந்து இன்னொரு பெண்ணுக்கு, அனுபவங்களைக் கடத்துவதை பெண்கள் எப்போதும் செய்து வந்திருக்கிறார்கள். வாய்மொழி மரபாக அவர்களிடம் இந்த அனுபவங்களை கடத்துதல் நிகழ்ந்து வந்திருக்கிறது. பெண்கள், தங்கள் உடலையே ஒரு பிரதியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அனுபவங்களை, தங்கள் உடல்வெளியிலும் மனவெளியிலும் அவர்கள் தேக்கி வைத்துள்ளார்கள். நினைவுகள், ஞாபகங்கள், சொலவடைகள், பழமொழிகள், புதிர்கள், பாடல்கள், ஒப்பாரிகள் என எக்கச்சக்கமான வடிவங்கள் அவர்களிடம் இருக்கிறது. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் நிறைய பெண்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்கள் பகல் நேரங்களில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசுவார்கள். உரையாடல் நீண்டுகொண்டே செல்லும்போது, அவர்களின் பேச்சு நிலையில்லாமல் தாவிக்கொண்டே இருக்கும். மாலை கவ்விய இரவு வரும் போது, அவர்களின் ஆழ்மன விஷயங்கள் கிளர்ந்துவிடப்படும். பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அப்போது வெளிப்படும் அவர்களது மொழியும் ரிதமும், அழுகையும் வலியும் நிறைந்த ஒரு அனுபவத்தை நமக்குக் காட்சிப்படுத்துகிறது. இதனை பெண்களின் மரபுரிமையாக நான் பார்க்கிறேன். இன்று குறைந்துவிட்ட இந்த மரபுரிமையை மீட்டுத்தரவும், அனுபவப் பகிர்வை இலக்கியம் வழியாக சாத்தியப்படுத்த, கவிதை எனக்குச் சிறந்த ஊடகமாக இருக்கிறது. என் உடல் வழியாக உள்வாங்கிக் கொள்கிற அனுபவப் பகிர்வுகளை, கவிதை வழியாக நான் கடத்திக்கொண்டே இருக்கிறேன்.
தீராநதி: இந்த வகையில், உங்களின் கவிதை உலகத்திற்கு நெருக்கமானவராக நீங்கள் உணர்கிற கவிஞர்கள் யார்?
குட்டி ரேவதி: தமிழில் யாரையும் சொல்ல முடியாது. தொடக்கத்தில் சில்வியா பிளாத் கவிதைகளை அதிகம் படித்தேன். ஆனால் இப்போது அவரது உலகமும் எனது உலகமும் வேறு வேறு என்று தோன்றுகிறது. மகாஸ்வேதா தேவியை கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்தேன். ஆனால் அவர்களது உலகமும் மிகவும் பாலினம் சார்ந்ததாக இருக்கிறது. பழங்குடியினர் சார்ந்து அவர்கள் அதிகம் வேலைகள் செய்திருக்கிறார்கள். என்றாலும் நான் விரும்புகிற அளவுக்கு அவர்களை அவர் தொடவில்லை. எனவே, எனக்கு போஷிக்கிறவராக அவரையும் என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தீராநதி: உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அடிக்கடி எடுத்து படிக்கிற கவிஞர்கள் யார்?
குட்டி ரேவதி: பிரமிள், தேவதேவன் இருவரும்தான் எப்போதும் எனக்குப் பிடித்த கவிஞர்கள். பிரமிள் பற்றி நான் மீண்டும் மீண்டும் பேச விரும்புகிறேன். கவிதை ஒரு உறைந்த வடிவம் என்று எனக்குத் தோன்றுகிறது. பிரமிளிடமோ அது அதி உறைந்த வடிவமாக இருக்கிறது. தேவதேவன் மிகவும் அரூபமான ஓர் ஆளுமை. அவர், கவிதைக்குள் இப்போது மிகவும் நெகிழ்வான வடிவத்துக்கு நகர்ந்துவிட்டார். 'குளித்துக் கரையேறாத கோபியர்கள்' எழுதிய தேவதேவன் இல்லை, இப்போதிருக்கிற தேவதேவன். மெதுவாக கவிதைக்குள் உரைநடைக்கு அவர் நகர்கிறார். ஆனால் அதற்குள் ஆழமாக கவித்துவம் இருக்கிறது என்பதுதான், அவரது பலம். பிரமிள், தேவதேவன் இவர்கள் இருவர்களின் இயக்கமும், எப்போதும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கவிதையை இயக்கபூர்வமாக எப்படி சாத்தியப்படுத்துவது என்பது உட்பட, இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு நான் கூர்ந்து கவனிக்கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு வலிமையை அவர்கள் எனக்குத் தருகிறார்கள். எனக்குள் ஒரு வெற்றிடம் உருவாகும் போது, மிகவும் சோர்ந்திருக்கும் போது, ஒரு உத்வேகத்தைத் தருவதற்காக இவர்களை நான் படிப்பேன். திரைப்படங்கள் பார்ப்பதும் கவித்துவத்தை மீட்டுத் தருகிற, கவிதை எழுத தூண்டுகிற விஷயங்களுள் ஒன்றாக எனக்கு இருக்கிறது. ஆனால் அதிகமும் பெண்களுடனான உரையாடல்தான், கவிதை எழுதுவதுக்கான தூண்டுதலைத் தருவதாக எனக்கு இருக்கிறது.
தீராநதி: உங்கள் சமகால கவிஞர்களைப் படிக்கிறீர்களா?
குட்டி ரேவதி: நான், புத்தகமாகவும் இதழ்களிலும் வெளிவரும் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில் சுகுமாறன் கவிதைகள் படிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. மற்றபடி புத்தகங்களாகவும் இதழ்களிலும் வெளிவரும் சமகால கவிதைகளிலிருந்து பெற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லாமல்தான் இருக்கிறது. ஆங்கிலத்திலும் அனேகமாக பாப்லோ நெருடா, டி.எஸ்.எலியட் போன்ற பெரிய கவிஞர்கள் அனைவரையும் படித்திருக்கிறேன். இவர்களை விரும்பி படிக்கிறேன். ஆனால், அவர்களால் எந்த வகையில் நமக்கு உதவ முடியும் என்று தெரியவில்லை. நமது நிலப்பரப்பு, மொழி, வடிவம் எல்லாம் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறானது. சிலநேரங்களில் நம்மிடமிருந்து மிகவும் பின்தங்கி இருக்கிறவர்களாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். மற்ற எந்த மொழியையும் விட கவிதை இயக்கம் தமிழில் மிகவும் தீவிரத்துடன் இருப்பதாக நான் கருதுகிறேன். இரண்டாயிரம் வருட பாரம்பரியம் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தீராநதி : 'விமரிசனங்களைப் புறக்கணிக்கிறேன்' என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். விமரிசன இயக்கம் படைப்பியக்கத்துக்கு வலு சேர்க்கக் கூடியது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
குட்டி ரேவதி : விமரிசன இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மொழியில்தான் படைப்பியக்கமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில், எனக்கு மறுப்பு இல்லை. தமிழில், பிரமிள் அந்த வகையில் மிகச் சிறப்பாக இயங்கியிருக்கிறார். மிகத் தீவிரத்துடனும் சமூக அக்கறையுடனும் அதனை அவர் செய்திருக்கிறார். அவரைப் போன்ற திறந்த இதயத்துடன் இருக்கும் இன்னொரு விமரிசகரை தமிழில் நான் பார்த்ததில்லை. இன்று தமிழ் விமரிசகர்கள் அவர்களின் சுயமதிப்பீடுகள், குழுக்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்துதான் விமரிசனக் கருத்துகளை முன்வைக்கிறார்கள். பூடகமாகவோ அல்லது மறைவாகவோ இல்லாமல் பட்டவர்த்தனமாகத் தெரியும்படிதான், இதனை அவர்கள் செய்கிறார்கள். தமிழில் பெரிய விமரிசகராக அறியப்படுகிறவர்கள் அனைவருக்கும் யார் சிறந்த கவிஞர், யார் சிறந்த எழுத்தாளர் என்று தெரியும். ஆனால் எழுதும் போது அவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருப்பதில்லை. தங்கள் அரசியல் சார்ந்து, தங்களுக்கு வேண்டியவர்கள் யார் என்று பார்த்து, அவர்கள் விமரிசனம் எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்து வளமையால் ஒரு மோசமான படைப்பை நல்ல படைப்பு மாதிரி காண்பிக்க அவர்களால் முடிகிறது. கலை சார்ந்த அக்கறையற்ற, தான்தான் பிரதானம் என்ற எண்ணத்தால் உருவாவது இது. ஆனால் அவர்களின் விமரிசனக் கட்டுரைகளைப் படிக்கும் நுட்பமான வாசகன் மிக சுலபமாக அதனைக் கண்டுகொள்வான் என்றுதான் நினைக்கிறேன். இதனால், விமரிசகர்கள் மீதான நம்பகத்தன்மை பெருமளவு குறைந்திருக்கிறது. ஆரோக்கியமான விமரிசனங்களும் உள்ளன. ஆனால் மிகக் குறைவாகத்தான் இது உள்ளது. முந்தையவற்றைப் போல் இவற்றை நான் புறக்கணிக்க முடியாது. புறக்கணித்தாலும் நுட்பமாக என்னுள் ஊடுருவும் தன்மையை அவை கொண்டிருக்கும். துரதிர்ஷ்டமாக என் கவிதைகள் குறித்து இப்படி ஆரோக்கியமான விமரிசனங்கள் இதுவரைக்கும் வரவில்லை. வந்தவற்றில் பெரும்பான்மையும் அவதூறுகள்தான்.
தீராநதி: 'கசடற' பத்திரிகையில் பெண் கவிஞர்கள் பற்றி வந்தவற்றை பார்த்தீர்களர் அதற்கான உங்கள் பதில் என்ன?
குட்டி ரேவதி: 'தமிழர் கண்ணோட்டம்' பத்திரிகையில் வந்ததையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டுமே மிகவும் அபத்தமானவை. ஆனால் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. சமூகம் எங்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை பார்ப்பதுக்கான கண்ணாடிதான் இது போன்ற தாக்குதல்கள்.
தீராநதி: உங்கள் கவிதைகள் குறித்து, 'வெறும் படிம அடுக்குகளாகத்தான் இருக்கிறது' என்ற, விமரிசனமும் இருக்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
குட்டி ரேவதி: பிரமிளிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட ஒன்றாக, என் கவிதையில் இருக்கும் படிமத்தைப் பார்க்கிறார்கள். நான் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. கவிதையில் படிமம் எங்கு அத்தியாவசியப்படுகிறதோ அங்கேதான் கவிதை நிற்கும். வரிக்கு வரி தேவையில்லாமல் படிமத்தை கவிதையில் போட்டுக் கொண்டிருக்க முடியாது. அப்படி உபயோகிக்கும் போது கவிதை நொறுங்கிப் போய்விடும். மேலும் படிமத்தைத் தேடிப் போவது மலினமான, எளிமையான ஒரு வேலையும் அல்ல. அது மிகவும் வலிகள் நிறைந்தது. ஒரு தொழிற்சாலையில் பொருட்களைத் தயாரிப்பது மாதிரி படிமங்களைத் தயாரிக்க முடியாது. அனுபவங்களை உள்வாங்கும் போது, நிகழ்கிற ஒரு உணர்ச்சி தெறிப்பு அது. கவிதையை எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான், ஒருவருக்கு கவிதைக்குள் வரும் படிமம் அலுப்பூட்டும் ஒன்றாக இருக்கிறது.
சமூகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு இழிவு, என் அந்தரங்கத்தைத் தாக்கும் போது, அதனை மிகச் சரியாக நான் உள்வாங்கிக் கொள்கிறேன். உலகமயமாக்கல், பெண் மீதான பாலியல் சார்ந்த வதை உட்பட எதுவானாலும், அது எனது அன்றாட புழக்கத்துக்கான வெளிக்குள் நிகழும் போது, உணர்ச்சிபூர்வமான ஒரு தெறிப்பு என்னிடமிருந்து வெளிப்படுகிறது. ஒரு சொல் அல்லது ஒரு சொற்கோர்வையாக அது விழுகிறது. அது ஒரு உருவத்தை தருகிறது. அந்த உருவம்தான் படிமமாக இருக்கிறது. இப்படி ஒரு சமூக அவலத்தை ஒரு சொல் அல்லது சொற்கோர்வையாக நான் தெறித்து அனுப்புகிற விஷயம்தான் என் கவிதையில் இருக்கும் படிமம்.
தீராநதி: 'பெண்ணுடலை ஆணுடலுக்கு வழங்குவதற்கான அவஸ்தையே' உங்களிடம் கவிதையாகியிருக்கிறது. மேலும் 'இக்கவிதைகள் ஆணிய கருத்தாக்கமான பெண்ணுடல் அருவருப்பானது என்பதையே வலியுறுத்துகின்றன' என்று மாலதிமைத்ரி உங்கள் கவிதைகளை விமரிசித்துள்ளார். 'முலைகள்' கவிதை குறித்த அவரது விமரிசனத்தையும் படித்திருப்பீர்கள் என்று கருதுகிறோம்?
குட்டி ரேவதி: 'விட்டுவிடுதலையாகி நிற்பதற்கான' ஒரு ஆரம்பகட்டம்கூட தமிழில் இன்னும் நிகழவில்லையே. ஆண்களுக்கு உடலை வழங்கி, அதிலிருந்து தங்கள் உடலை மீண்டும் மீண்டும் விடுவிப்பதுக்கான எத்தனத்துடன்தான், பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். மேலும் மாலதிமைத்ரி பார்ப்பது போல், மிகவும் மேலோட்டமாக கவிதைகளை அணுகுவதுக்கான தளத்திலிருந்து நான் எனது கவிதைகளைப் பார்க்கவில்லை. 'முலைகள்' கவிதையில் ஒரு பெண்ணின் முழு உடலையும் நிலப்பரப்பாக நான் மாற்றியிருக்கிறேன். எனது உடலின் வளர்ச்சியை நான் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். அதனடிப்படையில், உடலை காலமாறுபாட்டுக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பாக 'முலைகள்' கவிதையில் பார்த்திருக்கிறேன். எந்தெந்த நிலப்பரப்பில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறேன் என்பது அந்தக் கவிதையில் இருக்கிறது. அதில் எனது காமத்தை நான் கொண்டாடுகிறேன். அந்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும் முழுமையான நிறைவான ஒரு கவிதை அது.
வேறு விதமாகவும் அந்தக் கவிதையை வாசிக்க முடியும். சாதியை மிக நுட்பமாக அவதானிக்கிற அனேக சந்தர்ப்பங்கள் அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது. தலித் பத்திரிகைகள், இயக்கங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று ஒரு எழுச்சி நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. சாதியம் திணிக்கப்படும் முதல் இடமாக பெண் உடல்தான் இருக்கிறது. அதனை அந்தக் கவிதை பதிவு செய்கிறது. இன்னொன்று, உலகமயமாக்கல் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உலகத்தில், 'முலைகள்' ஒரு உயிர்பூர்வமான விஷயமாக இல்லை. செயற்கையான பொருளால் உருவான ஒன்றாக அது இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் முலைகள் மிகவும் ஆபாசமாக சித்திரிக்கப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் உயிர் விருத்திக்கான ஒன்றாகவும் அது இல்லை. வியாபாரத்தை வெற்றிகரமாக்குவதுக்கான சிறந்த ஒரு மூலதனம், அவ்வளவுதான். இதற்கான எதிர்வினையாகவும் அந்தக் கவிதையை பார்க்க முடியும்.
தீராநதி: அந்தக் கவிதை வெளிவந்த புதிதில், ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகத்தான் இப்படி நீங்கள் எழுதுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது. இன்று வரைக்கும் அந்த விமரிசனம் தொடரவும் செய்கிறது.
குட்டி ரேவதி: அதனை விமரிசனம் என்பதைவிட, தாக்குதல் என்றுதான் நான் பார்க்கிறேன். உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தக் கவிதை தொகுப்பு வந்திருந்தால், இவ்வளவு எதிர்ப்புகளை அது சந்தித்திருக்காது என்றுதான் கருதுகிறேன். மகாஸ்வேதாதேவி 'மார்புக் கதைகள்' (தீக்ஷீமீளவ ளவஷீக்ஷீவீமீள) எழுதியிருக்கிறார்.
தீராநதி: கவிதை எழுதுவது, உங்கள் ஆளுமையில் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்கள் என்ன?
குட்டி ரேவதி: மரணத்தோடு போராடுகிற மாதிரியான, சுவாதீனமற்ற ஒரு நிலையைத்தான் கவிதை என்னுள் உருவாக்குகிறது. சித்தர்களிடம் தங்கள் மரணம் எப்போது நிகழும் என்று முன்னாலேயே அவதானித்து விடுகிற நுண் உணர்வு இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு தீர்க்கதரிசனம். நமது முன்னால் வாழ்ந்து போன உதாரணம் ரமண மகரிஷி. அந்த நுண் உணர்வை கவிதை, அதில் தொடர்ந்து வேலை செய்யும் கவிஞர்களுக்கு தருகிறது, மேலும் வளர்த்தெடுக்கிறது என்று கருதுகிறேன். தத்துவவாதிகள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இவர்களும் தங்கள் பயணத்தில் அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பெறுகிறார்கள். சமூகம் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, எங்கே போய்ச் சேரும் என்பதை அவர்கள் தங்கள் அவதானிப்புகளால், தீர்க்கதரிசனத்தால் தங்கள் படைப்புகளில் வைத்திருக்கிறார்கள். இந்த நுண் உணர்வை கவிதை எனக்கும் தந்திருக்கிறது என்று கருதுகிறேன்.
தீராநதி: நீங்கள் ஒரு சித்த மருத்துவர். சித்தர்களின் ஏடுகளை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அவை உங்கள் படைப்பியக்கத்தை பாதித்திருக்கிறதா?
குட்டி ரேவதி: மிகவும் ஒழுங்கற்ற, ஒப்பனைகள் இல்லாத மொழி சித்தர்களின் மொழி. குறிப்பாக மொழியை அலட்சியம் செய்கிற, அதே நேரத்தில் வேறு வேறு சொற்களைக் கண்டடைகிற தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. சித்தர்களின் ஏடுகளை, படிக்க கிடைத்த வாய்ப்பை மிகவும் முக்கியமாக நான் கருதுகிறேன். அது அகவயமாக என் சிந்தனையோட்டத்தில் ஊடுருவி, மிகவும் ஆத்திகம் சார்ந்த நுட்பமான ஒரு மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது. உடலைப் பிரதானப்படுத்துகிற தத்துவம் சித்த தத்துவம். நிலைபேறு அடைவது என்பதை உடல் வழியாகத்தான் அடைய முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். சாதியை மறுக்கிற ஒன்றாகவும் சித்த தத்துவம் இருக்கிறது.
தீராநதி: கவிதை வடிவம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா, இல்லை வேறு வடிவங்களில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா?
குட்டி ரேவதி: கவிதை வடிவம் இன்னும் எனக்கு அலுப்பு தரவில்லை. ஆனால் நெடுங்கவிதைகள் மீது ஒரு ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. ஒரு வெளியை உருவாக்கிவிட்டு கவிதைக்குள் போவதற்கு நெடுங்கவிதை மிகவும் வசதியான வடிவமாக இருக்கிறது. ஒரு கவிஞன், அவன் விரும்பிய மாதிரி அரசாள நெடுங்கவிதை மிகச் சிறப்பான வடிவம்.
தீராநதி: பெண்ணியம் சார்ந்து தமிழில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?
குட்டி ரேவதி: பெண்ணியம் குறித்து உலகளவில் நிகழ்ந்திருக்கும் ஆரம்ப காலகட்ட விவாதங்களுக்குள்ளேயே தமிழில் இன்னும் நாம் போகவில்லை என்றுதான் கருதுகிறேன்.
தீராநதி: உலகின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்துள்ள பெண்ணிய விவாதங்களை அப்படியே தமிழுக்கு எடுத்துக்கொள்ள முடியாது, தமிழுக்கான பெண்ணியம் என்பது, அதிலிருந்து மாறுபட்டது என்ற கருத்தும் இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?
குட்டிரேவதி: நமது நிலவெளிக்கான பெண்ணியம் என்பது நமது பாரம்பரியம் சார்ந்துதான் உதயமாக முடியும் என்பதே என் கருத்து. நமது கோடைகாலம் மிக நீண்டது; நமது உணவு மிகவும் காரசாரமானது; உழைப்பு அதிகமுடையவர்கள் நாம்; மிகவும் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாகவும் நாம் இருக்கிறோம்; மொழி, நிலப்பரப்பு, வெயில் சார்ந்து நம்மிடையே ஏகப்பட்ட பிரிவுகள்; கண்ணகி, கற்பு போன்ற மொழிவழியாக உள்வாங்கிக் கொண்ட கற்பிதங்கள் நம்மிடம் அதிகம் இருக்கின்றன. அந்தக் கற்பிதங்களைக் கடக்க முடியாத மனத்தடைகளும் சமூகத் தடைகளும் நம்மிடையே அதிகம் இருக்கிறது. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: 'திருமணமான தொடக்க வருடங்களில் உணவில் சரியாக உப்பு போடாததுக்காக என் கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். ஆனால் இப்போது அடிப்பதில்லை. ஏனெனில் நான் சரியாக உப்பு போட கற்றுக் கொண்டுவிட்டேன்.'' எவ்வளவு பெரிய வலி இந்த கூற்றில் இருக்கிறது. நமது சமூகத்தின் கட்டுமானம் இதில் வெட்டவெளிச்சமாகிறது. நமது பெண்களைப் பொறுத்தவரைக்கும், பெரிய பயணங்களும் அனுபவப் பகிர்வும்தான் பெண்களின் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று கருதுகிறேன். ஆனால் பெண்கள் பயணம் செய்வதுக்கான சாத்தியங்கள் இங்கு மிகவும் குறைவு.
சாதியை அடிப்படையாக கொண்ட, இங்கிருக்கும் தீண்டாமையும் வேறு எங்கும் இல்லாத ஒன்று. ஆண் அதிகாரத்துக்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்தான் தீண்டாமை. கடந்த ஐந்து வருடங்களில் அரசியல், பத்திரிகை, இலக்கியம் உட்பட எல்லா இடங்களிலும் சாதியம் இன்னும் கூர்மையாகியிருக்கிறது என்றுதான் கருதுகிறேன். பாமா சொல்கிறார்கள்: 'தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் மூன்று விதமான வன்முறைக்கு ஆளாகிறது. மேல்சாதி ஆண், பெண் மற்றும் அதே சாதி ஆண் ஆகியோரின் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் பெண் உடல் உள்ளாகிறது.'' மேல் சாதி பெண்கள் கீழ்சாதி பெண்களை எந்தெந்த வகையில் ஒடுக்குகிறார்கள் என்பது இரண்டு பெண்கள் புழங்கும் பரப்பில் வெளிப்படும் ஒன்று. அதனை பாமா மிக நுட்பமாக அவதானித்திருக்கிறார்.
தீராநதி: தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகளில், பாலியல் சார்ந்த விஷயங்களே அதிகம் எழுதப்படுவதுக்கான சமூகவியல் காரணம் என்ன என்று சொல்ல முடியுமா?
குட்டி ரேவதி: ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களுக்கு, தங்கள் சாதியை சொல்லிக் கொள்வதில் பெரிய மனத்தடைகள் முன்பு இருந்தது. இப்போது அந்த மனத்தடைகள் இல்லை. பெண்கள், தலித்துகள், அரவாணிகள் உட்பட ஒடுக்கப்பட்ட அனைவரும், எந்த வகையில் தாங்கள் ஒடுக்கப்பட்டார்களோ அதனையே அதற்கு எதிரான ஒரு ஆயுதமாக இன்று முன்வைக்கிறார்கள். அதுதான் மொழியின் கூர்மையுடன் கவிதையில் இவ்விதம் வெளிப்படுகிறது என்று கருதுகிறேன். கவிதையில் வரும் பாலியல் உறுப்புகள் வெறும் பாலியல் உறுப்புகள் மட்டும் இல்லை. அதன் அடிநாதமாக இருப்பது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல். சாதியமும் பெண்ணியமும் இந்த இடத்தில் இணைகிறது. சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி, நான் உட்பட அனைவரும் ஒரு ஒடுக்கப்பட்ட மனநிலையில் இருந்துதான் தொடர்ந்து கவிதையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் சாதியத்திலிருந்து பெண்களை விடுவிக்கிற இடத்தை நோக்கி நகர்ந்தால், அது மிக ஆரோக்கியமானதாக இருக்கும்.
தீராநதி: ஆண்டாளுக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் பிறகு தமிழில் பெண் கவிஞர்களே இல்லை என்ற கவிஞர் விக்கிரமாதித்யனின் பேச்சுக்கு, 'அது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு; நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம்' என்று பல பெண் கவிஞர்கள் எதிர்வினை புரிந்திருக்கிறார்கள். உங்கள் தரப்பு என்ன?
குட்டி ரேவதி: சாருநிவேதிதாவும் மற்றும் பலரும்கூட இதுபோல் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எங்களை புறக்கணிப்பதுக்கான, ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு விஷயம்தான் இந்த ஒப்பு நோக்கல். இதற்குப் பின்னால், ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் சாதியம் சார்ந்த காரணங்களும் மிகப் பலமாக இருக்கிறது என்று கருதுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து, அதுவும் பெண்களிடம் இருந்து இப்படி வெளிப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி மற்றும் நான் எல்லோரது கவிதை உலகமும் மொழியும் வெளிப்பாட்டு முறையும் முற்றிலும் வேறுவேறானவை. அனைவரையும் பொதுமைப்படுத்தி பார்க்க முடியாது. பெண் கவிதைகளை பொதுமைப்படுத்தி பார்ப்பதை நான் அபத்தமாக நினைக்கிறேன்.
ஆண்டாள், காமம் சார்ந்த உறவு விஷயங்களை பக்தியாக பார்த்திருக்கிறார். பக்தி காதலாகி, காமத்தைக் கலந்து வெளிப்படுகிறது. காரைக்கால் அம்மையார், தங்கள் உடலை வருத்தி செய்கிற விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். இருவரிடமும், மொழி, வளமையும் கூர்மையும் கொண்டிருக்கிறது. ஆனால் சமூகத்தை உள்வாங்கிக் கொள்வது என்பது அவர்களிடம் எங்கேயும் நிகழவில்லை. இருவருமே அவர்களது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதுக்கான ஒன்றாகத்தான் கவிதைகளை பார்த்திருக்கிறார்கள். இன்றைய பெண் கவிஞர்களிடம், மிக நுட்பமான சமூகத்தைக் குறித்த அவதானிப்பு இருக்கிறது. அந்தவகையில்தான், நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம் என்று சொல்கிறோம்.
தீராநதி: 'தமிழ் பெண் கவிதையுலகில் பெண்ணிய தர்க்கம் தர்க்கமாகவே நின்றுவிடுகிறது. கவிதையாக உருமாற்றம் அடைவதில்லை. ஆனால் ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் தான், தனது காதல், தனது துயரம் என்பன போன்ற விஷயங்களைப் பற்றி எழுதும் போதுகூட, அவை தனிப்பட்ட ஆளுமையன்றின் அனுபவங்களாக, அவதானிப்புகளாக மட்டும் வெளிப்படுவதில்லை. அவர்களது கவிதைகளில் சொந்தக் கதையை விரிவான தளத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும் அறிவார்ந்த தர்க்கம் இருக்கிறது' என்று வ. கீதா எழுதியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்வீர்களா?
குட்டி ரேவதி: இதனை முற்றிலும் நிராகரிக்கிறேன். அவர் குறிப்பிடும் கட்டத்தை இன்றைய பெண் கவிஞர்கள் கடந்துவிட்டார்கள். ஆனால் ஈழத்து பெண் கவிஞர்களின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. பஹீமா ஜகான், சிவரமணி இவர்கள் இருவரையும் மிகப் பெரிய கவிஞர்களாக நான் கருதுகிறேன். போர் சூழலில் போராட்டத்துக்கு தங்களின் உடலையும் மனதையும் ஒப்புக்கொடுத்து, அங்கிருந்து தங்களது படைப்பியக்கத்தை இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் பெண் கவிதை என்று பேசும்போது, இவர்களைத்தான் நாம் முன்னிறுத்த வேண்டும்.
தீராநதி: உங்கள் சமகாலத்தவர்களான, புதிதாக தமிழில் எழுதிவரும் ஆண் கவிஞர்களை படிக்கிறீர்களா?
குட்டி ரேவதி: நான் தொடர்ந்து படிக்கிறேன். ஆனால் மிகவும் குறைவாகத்தான் அவர்களிடமிருந்து, நல்ல கவிதைகள் வருகின்றன. கற்பனையாக ஒன்றை உருவாக்கி அதனை வாழ்க்கையுடன் அவர்கள் பொருத்துகிறார்கள். எனவே, சலிப்பூட்டும் ஒன்றாக அவர்களது கவிதைகள் உள்ளன. அதற்கு மாறாக, பெண் கவிஞர்கள், வாழ்க்கையில் இருந்து எடுக்கிறோம். சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி மற்றும் நான் ஆகியோர்தான் தமிழ் மண்ணின் அடையாளங்களை உண்மையிலேயே சுவீகரித்துக் கொண்டிருக்கிறோம்.
தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று இலக்கியத்தைப் பிரித்து பார்ப்பதுடன் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
குட்டி ரேவதி: இல்லை. பெண் எழுதினால் பெண் மொழி, ஆண் எழுதினால் ஆண் மொழி என்று பிரிப்பது சரியல்ல. எழுத்தில் மனோபாவம் சார்ந்துதான் ஆண் மொழி, பெண் மொழி என்று இருக்க முடியும். ஒரு ஆணிடம் இருந்து சிறந்த ஒரு பெண் மொழி வெளிப்படலாம். சில ஆண் இயக்குநர்களின் திரைப்படங்களில், அதில் வெளிப்படும் பெண்களின் உலகம், ஆச்சர்யமூட்டும் வகையில் நுட்பமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு பெண்ணால் மட்டும்தான் அது சாத்தியப்படும் என்று தோன்றும். ஆனால் அங்கே அது ஆணால் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஒரு கட்டத்தில் இருந்தது. இப்போது அதனை கடந்து தமிழ் பெண் கவிஞர்கள் வந்துவிட்டார்கள்.
தீராநதி: ஆணாதிக்க வெறுப்பு என்பதுடன் ஆண் வெறுப்பும் தமிழ் பெண் கவிஞர்களிடம் உள்ளது என்ற கருத்து இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்வீர்களா?
குட்டிரேவதி: நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழில் பெண் கவிஞர்கள் காதல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் மனதில் ஆண் வெறுப்பு இருந்தால் எப்படி காதல் கவிதைகள் எழுதியிருக்க முடியும். பெண்கள் அபரிமிதமான காதலை தங்கள் எதிர் பாலினத்தின் மீது வைத்திருப்பதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் என்று நான் கருதுகிறேன். ஆனால் ஈழத்துக் கவிஞர்களிடம் இருந்து வந்துள்ள காதல் கவிதைகளுடன் ஒப்பிடும் போது, நமது காதல் கவிதைகள் மிகவும் சலிப்பூட்டுபவைகள். ஈழத்துக் காதல் கவிதைகள் மிகவும் புதியதாக உள்ளன. குறிஞ்சிப் பூ மாதிரியான பரவசத்தையும் பிரயாசத்தையும் அவை தன்னுள் வைத்திருக்கின்றன. போருக்கு நடுவே காதல் மிகவும் அற்புதமான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது.
தீராநதி: 'சண்டக்கோழி' திரைப்படத்தில் வரும் வசனம் காரணமாக உருவாகியிருக்கும் சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன?
குட்டி ரேவதி: தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆரோக்கியமான சூழல் இன்று இல்லை. தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பான, அவர்களது தீவிரத்துடன் இயங்கிக் கொண்டே செல்வதுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முன்பே குறிப்பிட்டது போல் ஆரோக்கியமான விமரிசனமும் இங்கு இல்லை. குழுக்கள் சார்ந்த போட்டி பொறாமைகள் அதிகரித்துவிட்டன. இதனால், இலக்கியவாதிகளிடையே ஒரு நோய்க்கூறான தன்மை உருவாகியுள்ளது. சுயசாதி அபிமானமும் ஆதிக்க கருத்துகளும் அவர்களிடம் வேரோடி இருக்கிறது. இந்த இரண்டிலும் இருந்து வெளியே வருவதுக்கான எந்த பிரயத்தனமும் அவர்களிடம் இல்லை. இன்னொரு பக்கம் ஒரு ஆரோக்கியமான சினிமா சூழலும் இங்கு இல்லை. ஒரு சிறந்த படைப்பாளி, ஒரு சிறந்த இயக்குநருடன் இணைந்து வேலை செய்வதுக்கான, திரைக்கதை எழுதுவதுக்கான வாய்ப்பு மற்ற மொழிகளில் உள்ளது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிலுகள்' அடூர் கோபாலகிருஷ்ணனால் திரைப்படமாக்கப்பட்டது. கர்நாடகத்தில் அது போல் கிரிஷ்காஷரவள்ளி சிறந்த இலக்கியங்களைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார். சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் இடையே பரஸ்பரம் பங்களிக்க வாய்ப்புள்ள இந்த தளம் தமிழில் இல்லை. இது மிக முக்கியமான ஒரு பிரச்னை. இரண்டாவது, திரைப்படத் துறையிலுள்ளவர்களுக்கு தமிழ் பெண் கவிஞர்கள் மீது இருக்கும் வெறுப்பு. தமிழில் பெண் கவிஞர்கள் மீது நிகழும் தாக்குதல்களுக்கும், அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சாதியம் அடித்தளமாக இருக்கிறது என்று கருதுகிறேன்.
-0-
சந்திப்பு: தளவாய் சுந்தரம்படங்கள் : ஆர். சண்முகம்.
thanks:
feb 2006; theeranathi

0 Comments:

Post a Comment

<< Home

Free Web Page Hit Counters
lasik uk