நேர்காணல் :சேரன்
"தேசியங்கள் எப்போதும் ஒரு முகத்தோடு இரு
லதா
(சிங்கப்பூர்
கவிஞராகவும் சமூகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் கட்டுரையாளராகவும் பல தளங்களில் செயல்பட்டு வருபவர் சேரன். கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கை அரசியல் - சமூகவியல் பற்றிய ஆய்வுகளில் பல ஆண்டுகாலமாக மேற்கொண்டு வருபவர். கட்சிகள், அமைப்புகள் சாராது செயல்படுவதால் இலங்கை அரசியல் - சமூகவியல் குறித்து நடுநிலையான விமர்சனங்களை இவரால் முன்வைக்க முடிகிறது.
தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படும் இவரது கவிதைகள் னூஜர்மன், சுவீடிஷ். நார்வேயன், டச், சிங்களம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன ஆங்கில எழுத்துகளுக்கான கனேடிய அரசாங்கத்தின் மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்ற சேரன், தமிழில் இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு ஆகிய கவிதை நுக்ல்களையும் உயிர் கொல்லும் வார்த்தைகள் என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.
இலங்கையின் அரசியல், சமூகவியல் மற்றும் தமது வாழ்க்கை, விமர்சனங்கள், பற்றிய தனது கருத்துகளையும் பார்வைகளையும் திசைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்.
*
கட்டுரையாளராகவும் கவிஞராகவும் விமர்சகராகவும் சமூகவியலாளராகவும் வெவ்வேறு தளங்களில் இலங்கையின் அரசியலில் ஈடுபட்டு வருபவர் என்ற அடிப்படையில், போர் நிறுத்த உடன்பாடு நடப்பில் இருக்கும் மூன்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் - வளர்ச்சி பற்றிய உங்களது கணிப்பு என்ன?
இலங்கையின் அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஒரு கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழக நுக்லகம் ஒன்றில், ஆய்வாளர் ஒருவர் இலங்கை அரசியல் யாப்பு மற்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பல ஒப்பந்தங்களின் பிரதிகளை ஆவணக் காப்பகத்தில் தேடினேன் காணவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த நூலகர், ஒரு புன்சிரிப்புடன் பதில் சொன்னார்:
ஓஇலங்கை தொடர்பான ஆவணங்களை நாங்கள் மாத சஞ்சிகைகள், வார சஞ்சிகைகள் வைக்கின்ற பகுதியில்தான் சேர்த்து வைப்பது வழக்கம் அங்கே பாருங்கள்.ஔ
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி முடித்த பிற்பாடு இலங்கை நிலவரம் தலைகீழாக மாறி விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.இப்போது உள்ள நிலைமை ஒரு முற்றும் முழுதான போர் நிறுத்தமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எனினும் போர் நிறுத்தம் ஆரம்பித்த காலகட்டத்தில் எல்லாத் தரப்பிலும் போர் நிறுத்தம் தொடர்பாக எச்சரிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு இருந்தது. போரினால் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களிடம் பரவலாக மகிழ்ச்சியும், புதிய மாற்றங்களுக்கான தொடக்கநிலை ஏற்பட்டு விட்டது என்ற உணர்வும் மெல்ல மெல்ல ஏற்பட்டது.
எனினும் இருதரப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் எதிர்பார்த்த அளவுக்கு துரிதமாகவும் ஆழமாகவும் நடைபெறவில்லை. நார்வே நாட்டு நடுவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்து வந்தாலும் போர் நிறுத்தம் கணிசமான அளவுக்கு நடைமுறையில் பேணப்பட்டாலும் அரசியல்ரீதியான அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவது மிகவும் கடினமாகவே இருந்தது.
இதற்கிடையில் புலிகளுடன் போர்நிறுத்த ஏற்பாட்டை செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு சந்திரிகாவின் ஆட்சி அமைக்கப்பட்ட பிற்பாடு, நிலைமை மேலும் சிக்கலானதாக மாறிவிட்டது. சந்திரிகாவுடன் கூட்டுச் சேர்ந்து இருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) என்ற அமைப்பு பெருமளவுக்கு சிங்கள இனவாதம் பேசும் ஓர் அமைப்பாகத்தான் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக சிங்களப் பகுதிகளில், சிங்கள பௌத்த தீவிரவாதம் பேசுகின்ற அமைப்புகள் மெல்ல மெல்ல பலம் பெற்று வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு சிங்கள, ஆங்கில ஊடகங்களில் பெரும்பாலானவை பலமான பிரசாரத் துணையாக இருக்கின்றன. இந்த அமைப்புகள் எவ்வகையான பேச்சு வார்த்தைகளுக்கும் விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்தங்களுக்கும் மிகத் தீவிரமான எதிர்ப்பாக இருந்து வருகின்றன.
இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமான ஒரு சக்தியாக ஜேவிபி இப்பொழுது மேலெழுந்து இருக்கிறது. இக்கட்சியின் தயவு இல்லாமல் ஆட்சி அமைப்பது சிங்களக் கட்சிகளுக்கு மிகச் சிரமமான காரியமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலை 1956ல் ஒரு சிங்கள பௌத்த தேசிய அலை பண்டார நாயக்கா குடும்பத்தை அரசியலில் முன்னரங்குக்குக் கொண்டுவந்தமையை நினைவூட்டுகிறது. சிங்கள தேசியவாதத்தின் வரலாற்றில் 1956 ஒரு புரட்சிகர காலகட்டமாகக் கருதப்படுகிறது. காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து பெற்ற அரசியல் சுதந்திரத்தை மட்டுமல்லாது, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றிலும் சிங்கள மக்களை முக்கியப்படுத்திய ஒரு காலகட்டம் அதுவாகும். அந்தக் காலக்கட்டத்தில்தான் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். சிங்கள மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி இந்தக் காலகட்டத்தின் சிறப்பான இயல்பாக இருந்தது. கிட்டத்தட்ட இதுபோன்றதொரு சிங்கள பௌத்த மேலெழுச்சியை ஜேவிபியும் அதனுடைய தோழமை இனவாதக் கட்சிகளும் முன்னிறுத்துகின்றன. இபப்பொழுது அவர்களுடைய சிங்கள பௌத்த தேசியவாதம் உலகமயமாக்கலுக்கு எதிரானதாகவும் சிங்கள பௌத்த பண்பாட்டு அடிப்படை வாதத்துக்குத் திரும்புவதாகவும் சிங்கள மக்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது. இது அண்மைக்காலங்களாக ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
இந்தத் திருப்புமுனை போர் நிறுத்தத்தை உறுதியாக வைத்திருக்கவும், சமாதான பேச்சு வார்த்தைகளை செழுமையான முறையில் முன்னெடுப்பதற்கும் நிலையான தீர்வைக் கொண்டு வருவதற்கும் பங்களிக்கப் போவதில்லை.
இந்தச் சூழலின் தொடர்ச்சியாகத்தான் இப்பொழுது பெருமளவுக்கு குழம்பியிருக்கும் போர் நிறுத்தத்தை நாங்கள் பார்க்க வேண்டும். இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இப்பொழுது ஒரு நிழல் யுத்தத்தை நடத்தி வருவதை எல்லோரும் அறிவர். குறிப்பாக புலிகள் அமைப்பிலிருந்து கருணாவும் அவருடைய குழுவினரும் பிரிந்த பிற்பாடு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கருணாவும் அவரது குழுவினரும் இலங்கை அரசாங்கத்தின் உளவு சேவை, ரகசியப் படையினருடன் சேர்ந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கொன்று வருவதும் இதற்குப் பதிலடியாக கருணா குழுவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் இலங்கை அரசாங்கத்தின் வேவுப் படையினரையும் விடுதலைப் புலிகளை தொடர்ச்சியாகக் கொன்று வருவதும் நடந்து வருகிறது.
இந்த நிழல் யுத்தம் எந்தக் கணத்திலும் முற்றும் முழுதான யுத்தமாக மாற்றம் பெறுவதற்கான அபாயமான சூழ்நிலை இருந்துகொண்டே வருகிறது. இந்த நிழல் யுத்தத்தில் பொது மக்களும் பலியாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கையின் அதிபர் தேர்தல் நவம்பர் 17, 2005ல் நடக்க இருக்கிறது. இந்த அதிபர் தேர்தலில் சந்திரிகாவினுடைய கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது அரசியல் திட்டம் தமிழ் மக்களுக்கு தன்னாட்சியை வழங்குவதற்கு எதிரானதாகும். கூடவே சமாதான ஒப்பந்தத்திற்கும் நார்வேயின் அணுசரனையாளரான பங்களிப்புக்கும் எதிரானதாக இருக்கிறது.
அவரது தேர்தல் பிரகடனங்கள் சிங்கள இனவாதத்தை மையம் கொண்டதாகவே இருக்கிறது. அவருக்கு எதிராகப் போட்டியிடுகின்ற ரணில் விக்ரமசிங்கவினுடைய திட்டங்களோ சமாதானப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கான புதிய எந்த ஆலோசனையும் தரவில்லை.
எனவே அடிப்படையில் இதுவரை காலம் இருந்த வந்த அரசியல் சூழ்நிலை மாற்றம் பெறும் என்ற நம்பிக்கை குறைவாக இருக்கிறது. எனவே இருள் சூழ்ந்த காலம்தான் தொடர்ச்சியாக அமையப் போகிறதா என்ற ஆதங்கமே எனக்குள் மேலெழுகிறது.
போர் நிறுத்தக் காலத்தில் தேசிய அளவில் எத்தகைய வளர்ச்சியைக் காண முடிகிறது?
இலங்கையைப் பொறுத்த வரையில் ஓர் ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், தீவிரமான போர்க்காலத்தில்கூட இலங்கையின் வளர்ச்சி வீதம் பெருமளவுக்குக்கூடித்தான் வந்துள்ளது. பொருளாதார ரீதியில் வெளிநாடுகளின் ஆதரவு கிடைத்திருந்தாலும், திறந்த பொருளாதாரக் கொள்கைகளை தாராளமாக நடைமுறைப்படுத்திய படியால், ஒரு பக்கம் போரை நடத்திக்கொண்டே மறுபக்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என்று பெருமையாகக் கூறி வருகிறார் இலங்கையின் நிதி அமைச்சர். இலங்கையின் தேசிய பொருளியல் வளர்ச்சி எட்டு விழுக்காடாக அதிகரிக்குமானால் 2015ம் ஆண்டு வாக்கில் வறுமைக் கோட்டுக்குக் கீழே எவரும் இல்லாத ஒரு தரத்துக்கு இலங்கை முன்னேறி விடும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால் தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பொறுத்தவரையில் எந்த வகையான பொருளியல் வளர்ச்சியும் இல்லை என்பது மட்டுமல்ல, கல்வித்தரம், வாழ்க்கைத்தரம் போன்றன பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பது பெருமளவுக்கு தென்னிலங்கைக்கே ஏராளமான நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. உண்மையில் தென்னிலங்கை என்று சொல்வதுகூடப் பொருத்தமானதாக இருக்காது. கொழும்பு மாநகரையும் அதனை அண்டியுள்ள மேற்கு மாகாணத்தின் பகுதிகளும்தான் இலங்கையின் வளர்ச்சியின் மையமாக இருக்கின்றன. மேற்கு மாகாணத்துக்கு வெளியே எந்த வகையான முக்கியமான தொழில் துறையோ வளர்ச்சி வாய்ப்புகளோ இல்லை. வந்து சேர்கிற வெளிநாட்டு மூலதனமும் கொழும்பையும் கொழும்பை அண்டிய பகுதிகளுக்குமே சேர்கிறது. அந்த வகையில் கொழும்பு மாநகர், ஒரு செயற்கையான முறையில் வளர்ச்சி பெற்ற ஒரு நவீன நகரமாகக் காட்சி தருகிறது. ஆனால் முழு இலங்கையையும் பொறுத்தவரையில் அடிப்படையிலேயே முரண்பாடு மிக்க வளர்ச்சிப் போக்குதான் இருக்கிறது.
இத்தகைய சமனற்ற வளர்ச்சிதான் ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளுக்கு ஒரு மையக் காரணியாக விளங்கி வந்திருக்கிறது. அப்படிப் பார்க்கிறபொழுது இலங்கையில் எந்தவகையான அடிப்படை மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது.
1956ல் இருந்தே இலங்கையின் வளர்ச்சிப் பாதையில் சிறுபான்மை மக்கள் பயனடைவது திட்ட மிட்டமுறையிலேயே தடுக்கப்பட்டு வந்தது. இப்பொழுதும் இந்த நிலைமை பல்வேறு வடிவங்களில் நீடிக்கிறது. கட்டடற்ற பொருளாதார அமைப்பு மூலத்தனத்துறையில் தமிழ் முஸ்லிம் முதலாளிகள் ஒரு சிலரை கொழும்பில் வளப்படுத்தியுள்ள போதும் ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினங்கள் முன்னேற்றம் அடைவதற்கான அரசும் நிறுவனங்களும் சார்ந்த தடைகள் இருக்கின்றன.
அரசாங்கத்தின் தரப்பிலும் புலிகள் தரப்பிலும் அமைப்பு ரீதியான, கொள்கை ரீதியான, மாற்றங்களைக் காண முடிகிறதா?
இலங்கை அரசைப் பொறுத்த வரையில் அமைப்பு ரீதியான எந்த வகையான மாற்றங்களும் ஏற்படவில்லை. ஏற்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. அரசைப் பொறுத்த வரையில் பெருமளவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசாக இருக்கிறது.
அந்த அரசு பெரும்பான்மையின மக்களான சிங்கள பௌத்தர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் அவர்களின் நலன்களைப் பேணுவதற்குமாகவே கட்டமைக்கப்பட்டது. இலங்கையில் அரசியல் யாப்பிலேயே இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய முரண்பாடுகளுக்கு ஒரு முக்கியமான காரணம் சிறுபான்மை மக்களினுடைய நலன்களையும் உரிமைகளையும் கணக்கில் எடுக்காத இந்த அரசியல் சித்தாந்தமாகும்.
இந்த அரசு முற்றும் முழுதாகச் சீரமைக்கப்படாவிட்டால், இலங்கைப் பிரச்னைக்கு எந்தவிதமான தீர்வும் கிடையாது. ஆனால் இந்த அரசைச் சீரமைப்பதற்கும் மாற்றுவதற்கும் சிங்களத்தரப்பிலிருந்து மிகப் பலமான எதிர்ப்புகள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. ஒரு சில மட்டங்களில் ஒரு கூட்டு ஆட்சியினுடைய தேவை உணரப்பட்டாலும் கூட்டு ஆட்சி என்ற சொல்லே சிங்கள அரசியலில் வேப்பங்காயாக் கசக்கிறது. கூட்டு ஆட்சி தேவை என்பதை ஏற்றுக்கொள்கின்ற ஓரிரண்டு அரசியல் தலைவர்கள்கூட, வெளிநாடுகளினும் மற்றும் அனைத்துலக நிர்பந்தத்தின் காரணமாகவே அதனைச் சொல்கிறார்களே தவிர, உள்ளார்ந்து இதய சுத்தியுடன் அதனைச் சொல்வதாகத் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்து வருகின்ற இந்த மூன்று ஆண்டுகளில் அமைப்புரீதியாக பெருமளவு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறார்கள். இதுவரை காலமும் போராடுகின்ற ஓர் இயக்கமாக வளர்ச்சி பெற்றிருந்த அவர்கள், கடந்த ஆண்டுகளில் பெருமளவுக்கு, சட்டரீதியாக அங்கீகாரம் பெறாத ஓர் அரசாகவே மாறிவிட்டார்கள். அவர்களுக்கென்று தனியான ஆட்சிப் பிரதேசங்கள் இருக்கின்றன. காவல்துறை, விமானப்படை, கடல்படை போன்றவற்றை உருவாக்கி வைத்துள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட எல்லா வகையான அமைச்சுகளையும் கொண்ட ஓர் அரசாங்கமே இயங்கி வருகிறது. அந்தப் பிரதேசத்தில் பெருமளவுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன ஓர் நிறுவனமாகவும் புலிகள் அமைப்பு விளங்குகின்றது.
புலிகளின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் யார் செல்ல வேண்டும் என்றாலும் விசாஒ அனுமதி பெற்றே செல்ல வேண்டியிருக்கிறது, இலங்கை அரச தரப்பினர் உட்பட. வரிவசூலிப்பு, ஆயத்தீர்வை போன்ற அனைத்து அரசாங்கப் பிரிவுகளும் அவர்களிடம் அமைந்துள்ளன. வெளிநாட்டு துக்தரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அனைத்து நிறுவனங்களும் அவர்களை ஏறத்தாழ ஒரு தனி அரசாங்கம் என்பதாகவே அதிகாரபூர்வமற்ற முறையில் நடத்தி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுக்கு அரசியல்ரீதியாக அவர்கள் பயணம் சென்றுள்ளார்கள். அந்தவகையில் இந்த போர் நிறுத்த காலகட்டத்தை தங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்கின்ற ஒரு காலகட்டமாக புலிகள் கணிசமான அளவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சுனாமிக்குப் பின்பான அவர்களுடைய நிவாரண, மீள்அமைப்புப் பணிகளும் அனைத்துலக மன்றத்தில் அவர்களுக்குச் சாதகமான ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி இருந்தன. கூடவே இந்த அங்கீகாரத்தின் மறுபுறமாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவை தொடர்பான அனைத்துலக சமூகத்தின் கேள்விகளுக்கும் அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. போர் நிறுத்த காலகட்டத்தில் அவர்களால் நடத்தப்பட்ட பல கொலைகளுக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டி இருந்தது. இத்தகைய அனைத்துலக நெருக்கடிகளின் விளைவாகவும் தமது அரசின் பல்வேறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காகவும் வடகிழக்கு மனித உரிமைகள் அமைப்பு, சட்டத்துறை போன்ற பலவற்றை அவர்கள் உருவாக்க வேண்டி இருந்தது.
எனினும் புலிகளின் அரசு வடக்கிலும் கிழக்கிலும் சீரான முறையில் அமைந்திருப்பதாகச் சொல்ல முடியாது. வடக்கில் குறிப்பாக வன்னிப் பகுதியில் பெருமளவுக்கு நிறுவனமயப்பட்டதாகவும் திறன் வாய்ந்ததாகவும் இயங்கி வருகின்ற இந்த அரசு, அதேஅளவு வீச்சுடன் கிழக்கில் இயங்கி வருவதாகச் சொல்ல முடியாது. இதற்குப் பல்வேறு வகையான அரசியல், புவியியல் காரணங்கள் இருக்கின்றன.
கொள்கைரீதியான மாற்றங்கள் என்று இலங்கை அரசியலில் அடிப்படையில் எதனையும் என்னால் சொல்லமுடியவில்லை. ஏனென்றால் இலங்கை அரசு இயந்திரத்தின் இயல்பும் கட்டமைப்பும், அதனுடைய அரசியல் கலாசாரம், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் காணப்படும் சமனற்ற பொருளியல் வளர்ச்சி, இவை எல்லாவற்றுக்கும் அடியாக இருக்கின்றன அரசாங்கத்தின் கொள்கைகள் எதிலும் எந்த மாற்றமும் இல்லை. தமிழீழத்துக்கு மாற்றாக ஒரு கூட்டாட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக புலிகள் அறிவித்திருந்தாலும் இந்தக் கூட்டாட்சியின் முன்வரைவாக இடைக்கால நிர்வாக அமைப்பை அவர்கள் முன் வைத்திருந்தாலும் இதில் எதனையுமே இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை.
படைத்திறனைப் பொறுத்தவரையிலும் ராணுவத் தலைமையிலும் விடுதலைப் புலிகள் பெருமளவுக்கு வெற்றியைச் சேர்த்திருக்கிறார்கள் என்பது உண்மை.
எனினும் இறுக்கமாக மையப்படுத்தப்பட்ட அரசியல் தலைமைத்துவம் என்ற வகையிலும், தமிழ் சமூகத்தின் மீதான இறுக்கமான சமூக, அரசியல் கட்டுப்பாடுகளை பேணுவதன் மூலம்தான் தமிழ்ச் சமூக ஒற்றுமையையும், தமிழர்களின் ஒருமைப்பாட்டையும், தமிழ்த் தேசியத்தையும் பேணலாம் என்பதிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலைமை இலங்கையின் வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும்கூட இருக்கிறது. போர் நிறுத்தம் துவங்கிய காலகட்டத்தில் அரசியல்ரீதியான நெகிழ்ச்சிப் போக்குகளை அவர்கள் காட்டியிருந்தாலும் கருணா அணியினருடைய பிளவுக்குப் பிற்பாடு பழையபடி இறுக்கமான ஒரு நிலைப்பாட்டுக்கு அவர்கள் சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது.
புலிகள் தரப்பிலும் இதுவரை பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் கருதவில்லை. ஆனால் அத்தகைய மாற்றங்கள் ஏற்படாமல் நீண்ட காலத்துக்கு தமிழ் மக்களுக்கான அனைத்துலக அங்கீகாரம் முற்றும் முழுதாகக் கிடைப்பதும் சாத்தியமில்லை. ஒரு கட்சி அரசு, ஊடகங்களின் மீதான கட்டுப்பாடும் ஏகபோகமும் என்பது அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. மாற்றுக்கருத்துகளை திறந்த மனதோடு எதிர்கொள்வது, விவாதிப்பது அதற்குரிய உரிமைகளை உறுதி செய்வது என்பன அரசியல் அறத்துக்கு மட்டுமல்ல, உயிர்ப்பான சமூக நல்வாழ்வுக்கும் சமூக அறத்துக்கும் அவசியம்.
இதற்கிடையில் வந்த சுனாமிஒ நாட்டின் அமைதியையும் போரையும் தலைகீழாகக் குலைத்துப் போட்டுவிட்டது. இந்தப் பேரிடர் நாட்டையும் மக்களையும் பொருளியல் அடிப்படையிலும் உளவியல் அடிப்படையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இருதரப்பும் போர் முரசம் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் ஒரு நாட்டினுடைய அரசியல் பிரச்னைகள், அதனையொட்டி தீர்வுகாணப்படுவதோ அல்லது தமக்குள் முரண்பட்டிருக்கும் மக்கள் இணக்கத்துக்கு வருவதோ சாத்தியமாக இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் எங்களிடம் இல்லை. ஒரு தற்காலிகமான அமைதியை இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்தக்கூடும். ஆனால் அடிப்படை முரண்பாடுகள் இருக்கின்ற நாடுகளில் நிலையான சமாதானத்தையும் இணக்கத்தையும் இவை கொண்டுவராது என்றுதான் நான் கருதுகிறேன். சுனாமியைப் பொறுத்தவரையில் ஏற்கனவே போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மக்கள் மேலும் பாதிக்கப்பட்டனர்.
சுனாமிக்குப் பின்னான நிவாரண உதவிகள், மறுசீரமைப்பு, போன்றவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதானால் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கட்டமைப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்று உலக நாடுகளும் ஐநா சபையும் கருதுகின்றன. அதுதான் யதார்த்தமுகூட.
இத்தகையதொரு குறைந்தஅளவு இணக்கத்துக்காவது இலங்கை அரசு இன்னமும் தயாராக இல்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவிகள் கிடைப்பது என்பது மிகக் கடினமான காரியமாக இருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சுனாமிக்குப் பின்பான உதவி என்பதே முற்றும் முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. இது ஒரு தீவிரமான பிரச்னை.
ஈழம் உருவாகும் சாத்தியம் உண்டா? ஈழம் உருவானால் தமிழர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஈழம் என்கிற தனி நாடு இலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்கனவே உருவாகியுள்ளது. ஆனால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரமும் அனைத்துலக ரீதியான அங்கீகாரமும் இன்னமும் கிடைக்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு குறிப்பாக வன்னிக்குச் செல்கிற எவரும் மிக எளிதாக உணரக்கூடிய விவரம் என்னவென்றால், இலங்கையில் இரு நாடுகள் இருக்கின்றன என்பதைத்தான். அது ஒரு யதார்த்தமாகவும் இருக்கிறது. இனிமேல் நடக்கப்போகிற பேச்சு வார்த்தைகளும் இணக்கப்பாடு குறித்த நடவடிக்கைகளும் உருவாகி இருக்கின்ற ஈழத்தை எந்த வகையில் சிக்கலற்ற முறையில் அனுசரித்துப் போவது என்பது தொடர்பாகத்தான் இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கைப் பிரச்னைக்கு கூட்டாட்சி தீர்வாகுமா, அந்தக் கூட்டாட்சி கனேடிய முறையிலான கூட்டாட்சியாக இருப்பது பொருத்தமா எனும் தலைப்பில் ஓர் ஆய்வரங்கை டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்தியிருந்தது. இந்த ஆய்வரங்குக்கு உறுதுணையாக இருந்தவர்கள் Forum for Federation என்கின்ற கனேடிய அமைப்பாகும். இந்த அமைப்புக்கு கனேடிய அரசாங்கமும் வெளியுறவுத் துறையும் நிதி உதவி அளித்து வருகின்றன. இதன் நோக்கம் கனேடிய முறையில் அமைந்த கூட்டாட்சியை இனப்பிரச்னை புரையோடி இருக்கும் நாடுகளில் பிரசாரம் செய்வதும் நடைமுறைப்படுத்த உதவுவதுமாகும். இந்த அமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையின்போது, ஆலோசகர்களாகப் பணி புரிந்தவர்கள். கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான முன்னாள் முதலமைச்சர் போப் ரே அவர்கள் வடக்கு கிழக்கில் ஓர் அங்கீகாரம் அற்ற அரசு உருவாகியிருக்கிறது என்று நான் தெரிவித்த கருத்தை மறுத்தார். இந்தக் கருத்தை அரசியல்தளத்திலும் ஆய்வுத்தளத்திலும் மறுக்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவர்கள் ஒழுங்கு செய்திருந்த இன்னொரு கருத்தரங்கத்தில் வடக்குக் கிழக்கில் புலிகளினுடைய ஓர் அரசு உருவாகியிருக்கிறது என்றும் அது ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம் என்றும் அவரும் அவருடைய அமைப்பினரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதுதான் யதார்த்தம் என்பதை இலங்கை அரசின் முக்கியமான அதிகாரிகளும் சில அமைச்சர்களும்கூட பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் சில, உருவாகியிருக்கும் ஈழத்துடன் பல விஷயங்கள் குறித்தும் எவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்பதற்கு இப்போதே தயாராக உள்ளன.
மிகச் சுவையான உதாரணம் என்னவென்றால், ஜெர்மனி அரசு அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இந்தத் தமீழிழ அரசுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்வதற்குத் தயாராக ஒரு வரைவு ஒப்பந்தத்தை எழுதி வைத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எத்தகைய சமாதானத் தீர்வுக்கும் கூட்டாட்சி அமைப்புக்கும் இலங்கை அரசோ சிங்களத் தலைமைகளோ முன்வராது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதை உணர்வதற்கு ஆழமான மெய்யியல் அறிவோ விண்வெளிப் பொறியியல் ஞானமோ எவருக்கும் தேவையில்லை.
இலங்கையின் கடந்தகால வரலாற்றைப் பார்க்கும் எவருக்கும் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் இலங்கை அரசு எவ்விதமான மறுசீரமைப்புக்கும் தயாராக இல்லை என்பதே. மீண்டும் மீண்டும் செய்கின்ற ஒப்பந்தங்களை கிழித்தெறிவதே அதனுடைய வரலாறாக இருக்கிறது. இதனால்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது என்னவென்றால், இலங்கையில் அனைத்துலக அங்கீகாரம் பெற்ற ஈழம் உருவாகுமானால், அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இலங்கை அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத தன்மையும் இலங்கையின் முக்கியமாக சிங்கள அரசியல்வாதிகளின் மடமையும் அமையும்.
ஒருசில சிங்கள அறிவுஜீவிகளும் சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் மனித உரிமைவாதிகளும் மட்டும்தான் இதனை உணர்ந்து கொண்டது மட்டுமன்றி, எழுத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜெயதேவ உயங்கொட, சுனந்த தேசப்பிரிய, விக்டர் ஐவன் போன்றவர்களையும் ?ரு குழுவினர் என்று அழைக்கப்படும் சிங்கள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களின் கூட்டமைப்பையும் குறிப்பிட முடியும்.
1990ல் சரிநிகர் இதழை துவங்கிய காலத்தில் இருந்து இத்தகைய கருத்தை நான் முன்வைத்து வந்திருக்கிறேன். வடக்குக் கிழக்கில் மெல்ல மெல்ல அனைத்துலக அங்கீகாரமற்ற அரசு ஒன்று உருவாகி விட்டது என்பதையும் அப்போதே எழுதியிருந்தோம். ஆனால் அந்தக் கருத்துக்கு பல தரப்பிலும் இருந்து தீவிரமான எதிர்ப்புகள் வந்தன.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் உருவாகியிருக்கும் ஈழத்தின் அரசியல் வரைபடமோ, புவியியல் வரைபடமோ, அன்றியும் படைத்துறை வலிமையோ, முக்கியமான சிக்கல் அல்ல. இந்த ஈழம் எவ்வளவு துரத்துக்கு எங்களுடைய அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக வழிமுறைகளையும் தார்மீகக் கடப்பாடுகளையும் பேணப்போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவருவதுபோல இந்த ஈழத்தில் நமது முஸ்லிம் மக்களினுடைய நிலை என்ன? இப்பொழுது ஆட்சி பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியம் முஸ்லிம் மக்களை வெளியில் தள்ளி விட்டது. தேசியங்கள் எப்போதும் ஒரு முகத்தோடு இருப்பதில்லை. இந்தத் தமிழ்த் தேசியத்துக்குள்ளேயே பல்வேறுபட்ட முகங்களும் படிமங்களும் தமக்குள் போட்டி போடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஓஎல்லாமே கலப்பற்ற தமிழ், தமிழன் மட்டுமே வாழும் தனிநாடுஓ என்று தமிழ் முதல் வாதமும் தமிழ் அடிப்படை வாதமும் பேசுகிற முகங்கள் இருக்கின்றன. அதேநேரம் பெண் விடுதலை, சமத்துவம், பன்முகப்பாடு என்பவற்றைப் பேசுகின்றன முகங்களும் இருக்கின்றன. வீரவழிபாடும் ஒரு கட்சி ஆட்சியும் மட்டும்தான் உறுதியான தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் என்று விசுவாசிக்கின்ற ஏராளமான முகங்கள் இருக்கின்றன.
அதேவேளை சைவமும் தமிழும்தான் தமிழ் தேசிய வாதத்தினுடைய திருமுகம் என்று திரிகரண சுத்தியாக நம்புகிற ஒரு போக்கும் இருக்கிறது. இத்தகைய பல்வேறுபட்ட முகங்கள் தமக்குள் போட்டி போடுகின்றன. இத்தகைய தேசியப் படிமங்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ளே மட்டுமின்றி, அந்த அமைப்புக்கு வெளியேயும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களிலும் காணப்படுகிறது.
முற்போக்கான விழுமியங்களும் சமத்துவமும் ஒட்டுமொத்தமான சமூக விடுதலையும் கூடி வருகிற ஒரு நாடு எப்பொழுதும் ஆரோக்கியமானதாக இருக்கும். அதை நோக்கிய போராட்டம் என்பது முற்றுப் பெறாத விடுதலையை முற்றாக வென்று எடுக்கின்ற ஒரு தொடர்ச்சியான போராகத்தான் அமையப் போகிறது. ஏனென்றால் நடைமுறை அரசியல் என்பது எப்போதும் உடனடி யதார்த்தத்துக்கு சார்பான முறையில் இரட்டை வேடங்களைப் போடத் தயங்குவதில்லை. அது வல்லன வாழும் என்பதைத்தான் தாரக மந்திரமாக உயர்த்திப் பிடிக்கிறது. வல்லன வாழும் என்பது சரிதான், அது எந்தவகையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதுதான் அறம் சார்ந்த கேள்வியாகும்.
ஒரு காலத்தில் உங்களது அரசியல் விமர்சனங்கள் உங்களுக்கு அரசாங்கத்திடமும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த - ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் தரப்பிலும் எதிர்பை ஏற்படுத்தின. அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? அப்போது உங்களது மனநிலை எதைச் சார்ந்து இருந்தது? உங்கள் இலக்கு என்னவாக இருந்தது?
அரசியலைப் பொறுத்தவரையில் எப்பொழுதுமே கட்சிசாராத, அமைப்புசாராத நிறுவனம்சாராத ஒருவனாகவே நான் இயங்கி வந்துள்ளேன். கலைஞர்கள்எப்பொழுதுமே சிந்தனையோடும் கற்பனையோடும் படிமங்களோடும் உறவாடுபவர்கள். இந்தக் கற்பனையும் சிந்தனையும் படிமங்களும் இலக்கியப் படிமங்கள் மட்டுமேயன்று. அரசியல் தீர்வு, சமத்துவ அரசியல் , போராட்டங்கள் போன்றவற்றுக்கான புதிய படிமங்களையும் புதிய சிந்தனைகளையும்கூட அவர்கள் எழுப்ப முடியும்.
இத்தகைய கற்பனைகளுக்கும் படிமங்களுக்கும் எந்தவகையான கட்டுப்பாடும் இருக்க முடியாது. ஆனால் அமைப்பு சார்ந்த கட்சி சார்ந்த நிறுவனங்களில் எப்பொழுதும் சுதந்திரத்துக்கு மிகுந்த எல்லைப்பாடுகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் இலங்கை அரசையும் இந்திய அரசையும் பல தளங்களில் தீவிரமாக விமர்சிக்க வேண்டி இருந்தது, இருக்கிறது.
அந்த அடிப்படையிலேயே விடுதலைப் போராட்ட அமைப்புகளை நான் விமர்சிக்க வேண்டி இருந்தது, இருக்கிறது. இலங்கை அரசையும் இந்திய அரசையும் அவர்களுடைய ஒடுக்குமுறை காரணமாக பல தளங்களில் விமர்சிக்க வேண்டி இருந்தது. எனவே எல்லாத்தரப்புகளில் இருந்தும் கோபத்துடன் கூடிய எதிர்ப்பு வந்ததில் ஆச்சர்யமில்லை.
இந்தச் சிக்கலுக்கு இன்னுமொரு பரிமாணமும் இருக்கிறது.
தேசிய போராட்டச் சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தினுடைய உரிமைகளை வலியுறுத்துகின்ற இயல்பே காணப்படுகிறது. எங்களுடைய மரபார்ந்த சூழலிலும் சமூகம், குடும்பம் போன்றவையும் அவற்றிற்கான உரிமைகளும் ஒரு தனி ஆளுடைய உரிமைகளுக்கு மேலானதாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தனிமனித உரிமைகள் என்பது ஒட்டுமொத்தமான சமூகத்தில் கூட்டு உரிமைகளுக்கு கீழ்ப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்ற மனநிலை எம்மத்தியில் பெருமளவுக்கு வேரோடி இருக்கிறது. தேசிய வாதம், நாட்டுப்பற்று, இயக்கப்பற்று, கட்சி விசுவாசம் என்பனவெல்லாம் இத்தகைய தனிமனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெருமளவில் கணக்கில் எடுப்பதில்லை.
கூட்டுரிமைகள் எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானவையோ அதேஅளவுக்கு தனிமனித உரிமைகளுக்கும் முக்கியம் என்ற கருத்துடையவன் நான். கூட்டுரிமைகளுக்கும் தனி மனித உரிமைகளுக்கும் இடையேயான ஒரு கயிறிழுப்பு தாராளவாத ஜனநாயகம் பேசும் பல்வேறு மேற்கு நாடு அரசுகளிலும் இருக்கும் ஒரு நிலைதான். அந்த அரசுகள் பெருமளவுக்குத் தனிமனித உரிமைகளை வலியுறுத்தி, கூட்டு உரிமைகளை அடக்கி வாசிக்கிறார்கள். அந்த வகையில் பல அமைப்புகளுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
ஈழவிடுதலை அமைப்புகள் பலவற்றோடு எனக்கு முரண்பாடுகள் ஏற்பட்டமைக்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. தீவிரமான அரசியல் சூழ்நிலையில் ஏதாவதொரு இயக்கத்துடனோ அல்லது அமைப்புடனோ சேராமல் தனியாளாக இருப்பது சாத்தியமில்லை என்பதையே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே இயக்கம் சாராதவன் நான், அமைப்பு சாராதவன் நான் என்பதை எவருமே நம்பத் தயாராக இல்லை. என்னுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் பார்த்துவிட்டு தங்களுடைய வசதிக்கு ஏற்றபடி ஏதாவதொரு அமைப்பினது அல்லது இயக்கத்தினது சாயத்தைப் பூசி விடுவது ஆரம்பத்தில் நடந்தது. அது மிகவும் சங்கடம் தருவதாகவும் ஆபத்துக்குரியதாகவும் இருந்தது. எனினும் தொடர்ச்சியாக என்னுடைய அரசியல் கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுத்திலும் பேச்சிலும் முன்வைத்து வந்துள்ளேன்.
இது தொடர்பாக மூன்று முக்கியமான கட்டுரைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
1) 1981ம் ஆண்டு புதுசுஒ சஞ்சிகையின் மூன்றாவது இதழில் வெளியான ஓஇலங்கையின் தேசிய இனப் பிரச்னை தொடர்பான ஓர் அணுகுதல்ஔ என்ற கட்டுரை. புதுசு இதழை இலக்கிய ஆர்வமும் விடுதலை அரசியலில் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் சிலர் நடத்தி வந்தனர். அந்தக் கட்டுரையில் தேசிய இனப் பிரச்னை தொடர்பாக இலங்கை இடதுசாரிகளின் கருத்தியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது எவ்வாறு ஒரு முற்போக்கான தேசிய விடுதலைப் போராட்டமாக மாற முடியும் என்பதையும் அந்த முற்போக்கான போராட்டத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆக்கபூர்வமான சக்திகளை வளர்த்தெடுப்பதும் ஒரு முன்நிபந்தனை என்று குறிப்பிட்டிருந்தேன்.
2) மரணத்துள் வாழ்வோம் (தமிழியல், 1985) கவிதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை. இந்த முன்னுரையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அரசியல் தளத்தில் வெற்றிபெறுவது மட்டும் போதாது என்பதையும் பண்பாடு, கலாசார தளங்களில் தனித்துவத்தையும் விடுதலையையும் பேணுவதும் வற்புறுத்துவதும் ஓர் அடிப்படையான தேவை என்பதை வலியுறுத்தியிருந்தேன்.
3) தேசிய விடுதலைப் போராட்டங்களில் பல்வேறு சிந்தனைகளும் பல்வேறு இயக்கங்களும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதன் அவசியம் குறித்த கட்டுரை. இந்தக் கட்டுரை யாழ்ப்பாணப் பல்கல்கலைக்கழகத்தில் அப்போது இயங்கி வந்த மறுமலர்ச்சிக் கழகத்தின் வெளியீடான தளிர் சஞ்சிகையில் 1985ல் வெளியானது. தளிர் சஞ்சிகைக்கு ஆரம்பத்தில் சிவரஞ்சித்தும் பின்னர் சர்வேந்திராவும் இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து காலமான திலீபனும் ஆசிரியர்களாக இருந்தார்கள்.
நிக்ராகுவாவின் சாண்டிநிஸ்டாக்கள் பல்வேறு அமைப்புகளாக இருந்தபோதிலும் எப்படி தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஓர் ஐக்கிய விடுதலை முன்னணியை அமைத்தார்கள் என்பதையும் அந்த அனுபவத்தில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இத்தகைய ஐக்கிய முன்னணி அமையவில்லை. அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மாறாக உறுதியான ஒரே தலைமை, ஒரே இயக்கம், இறுக்கமான கட்டுப்பாடு போன்றவற்றை தீவிரமாக வரித்துக்கொண்ட தேசியவாத கருத்தியல் ஆட்சிக்கு வந்துவிட்டது.
இந்த மூன்று கட்டுரைகளில் நான் வெளிப்படுத்தியிருக்கும் அடிப்படையான கருத்துகளில் இருந்து, இப்போது நான் முன்வைக்கும் கருத்துகள் எந்த வகையிலும் மாற்றமடையவில்லை.
இதற்குக் காரணம் மாற்றமே அடையாத கருத்துகளை நான் முன்வைத்துள்ளேன் என்பதல்ல. மாறாக, அந்தக் கருத்துகள் வெளியாகும்போது இருந்த அரசியல், வரலாற்றுச் சூழ்நிலைகள் தமிழ் மக்களின் விடுதலையைப் பொருத்த அளவில் இன்னமும் மாற்றமடையவில்லை என்பதேயாகும்.
ஒட்டுமொத்தமான விடுதலை என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது இன்றுவரை இருக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பதே வெறுமனே இனத்துவம் சார்ந்ததாகவோ பால் சார்ந்ததாகவோ, வர்க்கம் சார்ந்ததாகவோ சாதீயம் சார்ந்ததாகவோ குறுக்கிவிட முடியாது என்று நான் கருதுகிறேன். இந்த அனைத்துதளங்களிலும் ஒட்டுமொத்தமான விடுதலையை அவாவுவதுதான் எனது லட்சியமாக இருந்தது.
இது ஓர் இலட்சியவாத நிலைப்பாடு என்று எனது இயக்க நண்பர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்.
இதே இலக்கைத்தான் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அத்தனை இயக்கங்களும் முன் வைத்திருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல தேசிய விடுதலைப் போர் என்ற கருத்தாக்கம் பின் தள்ளப்பட்டு, வெறுமனே தேசியம் என்ற கருத்து மேலோங்கி விட்டது. தேசியக் கருத்தியலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளி விடுவதோ அல்லது தேசியங்களை விமர்சனமற்று பெரும் பரவசத்துடன் அனைத்துக்கொள்வதோ உகந்தது அல்ல. தேசியத்தின் பன்முகப்பட்ட தன்மையையும் தேசியத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட போக்குகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். தேசியவாதங்களைப் புறந்தள்ளி விடவோ, கவனிக்காமல் தட்டிக் கழிக்கவோ அன்றியும் தேசியத்தைக் ஓகடந்துஔ போகவோ முடியாது. தேசியங்களும் அவை கிளப்பும் சிக்கல்களையும் நாம் எதிர்கொண்டாக வேண்டி இருக்கிறது.
தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான நடைமுறைகள், வழிமுறைகள், தொடர்பாகவும் எனக்கு பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துகள் இருந்தன, இருக்கின்றன.
போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாத போதிலும் சிறை, தலைமறைவு வாழ்க்கை, நாட்டை விட்டு வெளியேறுதல் என்று ஒரு போராளியின் அனுபவங்களை அடைந்திருக்கிறீர்கள். இவை உங்களை எந்த வகையில் பாதித்திருக்கின்றன? உரப்படுத்தியிருக்கின்றன?
இந்த அனுபவம், எம்மில் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைத்திருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை, ராணுவச் சிறை அனுபவங்கள் தொடர்பாக என்னைவிட மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.
இந்த அனுபவங்கள் எனக்குத் தந்திருக்கின்ற முக்கியமான பலம் என்னவென்றால், நம்பிக்கையும் இடைவிடாமல் போராட வேண்டியதன் அவசியமும் ஆகும். என்னுடைய கவிதை ஒன்று, ஓசோகம் எமது சிறகுகளை பலப்படுத்துகிறது என்றும் கோபம் எமக்கு வலிமை சேர்க்கிறது என்றும் பாடுகிறது.ஔ
நம்பிக்கையும் இடைவிடாத போராட்டமும் பிழை காணில் பொறாத உள்ளமும் எப்போதும் விடுதலையை அவாவும் வேட்கையும்தான் எனது வாழ்க்கையின் மையமாக இருந்துவருகிறது. எவ்வகையான நெருக்கடிகளுக்கு ஊடாகச் சென்றபோதும் இவை மேலும் பலப்படுகின்றனவே அன்றி, உடைந்து போவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் தனிப்பட்ட முறையில் நொறுங்கிப் போகின்ற பல பொழுதுகள் வந்துதான் போயிருக்கின்றன. அந்தப் பொழுதுகளை மறக்க முடியாலும் இருக்கின்றது.
நண்பன் குகமூர்த்தியினுடைய நினைவு அடிக்கடி இது தொடர்பாக என்னைக் கலவரப்படுத்துகிறது. இலங்கை ராணுவத்தினர் அவரை கொழும்பில் கைது செய்தபொழுது குமாரி ஜெயவர்த்தன, சுனிலா அபய சேகர, டெஸ்மண்ட் பெர்ணான்டோ போன்ற மனித உரிமைவாதிகளான நண்பர்களின் உதவியுடன் அவரை உடனடியாக விடுவிக்க முடிந்தது. விடுவித்த பிற்பாடு, குகமூர்த்தி சொன்னது எனக்கு இப்போது நினைவிருக்கிறது. ஓஇன்னொரு முறை இப்படி நான் கைதாக நேர்ந்தால் தயவுசெய்து உடனடியாகவே என்னை வெளியே எடுத்துவிடு, அவர்கள் செய்யும் சித்ரவதையைத் தாங்கவே முடியாது. அதைவிட இறந்துபோவது மேல்ஔ என்று கண்ணீர் மல்க அவர் சொன்னார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிற்பாடு வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் அவர் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரையும் எங்களுக்குத் தெரியாது.
என்ன வகையான துன்பங்களை அனுபவித்திருப்பாரோ என்று நினைக்கும் பொழுதெல்லாம் பயங்கரமான கவலையும் ஆற்றாமையும் பொறுப்பற்ற கையாளாகாத்தனமும் என்னைச் சூழ்வதாகவே உணர்கிறேன். குகமூர்த்தியையும் அவர் போன்ற பல நண்பர்களையும் அடிக்கடி நினைத்துப்பார்க்கும் பொழுது இத்தகைய உணர்வு பொங்கி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் சர்வான்டஸ் படைத்த, காற்றாடிகளுடன் போராடச் சென்ற டான் கோட்டே (Don Quixote) என்ற பாத்திரம் போலத்தான் சில நேரங்களில் உணர்கிறேன்.
இன்று காலம் எல்லாத் தரப்பிலும் முதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இந்நிலையில் உங்களது விமரசனங்களும் கருத்துகளும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுகின்றன?
கட்சிகள், அமைப்புகள் சாராத ஒரு தனியன் என்ற அங்கீகாரமும் புரிந்துணர்வும் ஓரளவுக்கு பல மட்டங்களிலும் இப்பொழுது இருப்பதாக நான் கருதுகிறேன். எனது கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களும் கணிசமான அளவுக்கு அவற்றைச் சகித்துக் கொள்கின்ற பக்குவம் பல தரப்பில் இருந்தும் வெளிப்படுவதை காணமுடிகிறது. மோகத்துடன் கூடிய விருப்பும் கோபத்துடன் கூடிய வெறுப்பும் என துருவநிலைப்பட்ட விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதேநேரம் என்னுடைய எல்லாவகையான எழுத்துகளையும் தாராளமாக தமிழ் ஊடகங்களில் வெளியிடுவதற்கு இன்னும் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் தணிக்கை சார்ந்தவை அல்ல. பெருமளவுக்கு சுய தணிக்கையும் அச்சமும் பொறுப்புணர்வு இன்மையும் சார்ந்ததாகும். இது நமது தமிழ்ச் சமூங்களின் அறிவுப்புலத்தையும் அறிவுப்பலத்தையும் பெருமளவுக்குச் சிதைக்கிறது. தமிழ் வழங்கும் எல்லா இடங்களிலும் பெருமளவுக்கு இதுதான் நிலைமை.
கூடவே இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஈழத்து அரசியல் தீவிரமான இரண்டு முனைகளைக் கொண்டதாக மாறி விட்டது. ஒன்று புலி ஆதரவு, இன்னொன்று புலி எதிர்ப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் சுதந்தரமான கருத்துகளையும் சுதந்திரமான நிலைப்பாட்டையும் எடுப்பவர்கள் மீது மிகுந்த தாக்குதல்களும் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிற்பாடு ஜார்ஜ் புஷ் சொன்னது போல, ஒன்று நீங்கள் எங்களுடன் அல்லது பயங்கரவாதிகளுடன் என்ற நிலைப்பாட்டையே இரு தரப்பினரும் எடுக்கிறார்கள்.
அரசியல் விமர்சனம் என்பதை கறுப்பு வெள்ளையாகத்தான் பார்த்து முத்திரை குத்துகிற அபாயம் தொடர்ந்தும் நிலவி வருகிறது. இது என் போன்றவர்களுக்கு மிகுந்த சிக்கலைக் கொடுக்கிறது. நீண்ட காலமாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் கட்சியோ அமைப்போ சாராத அரசியல் விமர்சனம் என்று இயங்கி வந்த பலர் இப்பொழுது இந்த இரண்டு முனைகளில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட்டார்கள். தமிழ்த் தேசியம் என்கின்ற ஒரு பெரும் அலை, தனக்குள்ளே எந்தவகையான முரண்பாடுகளும் இல்லாத ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரே முகமானதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறவர்கள் பெருகி விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் விடுதலையை அவாவுகிற சுதந்திரமான அரசியல் கருத்தாளனாக நிற்பது எனும் என்னுடைய நிலைப்பாடு பெரும் புயலுக்குத் தலை கொடுக்கின்ற பனை மரத்தின் நிலைதான்.
இந்த முப்பதாண்டு காலப் போர் ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் போக்கிலும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களின் மிக முக்கியமானதாக நீங்கள் கருதுவது என்ன? நீங்கள் வரவேற்கும் மாற்றம் என்ன? விரும்பாத மாற்றம் என்ன?
கவிஞர் மகாகவியின் புதியதொரு வீடு என்கின்ற பாநாடகத்தில் வரும் சிலவரிகள் நினைவுக்கு வருகின்றன. ஓஎரிகின்ற கடலென்று மனிதர்கள் அஞ்சார். எதுவந்தெனில் என்ன அதை வென்று செல்வார்ஔ என்றும் ஓவேருக்குள் உறுதி கொண்ட வேம்புகள் நாங்கள்ஔ என்றும் அவர் பாடுகிறார். கடந்த முப்பதாண்டு கால போரும் இழப்புகளும் அளவிடமுடியா துயரமும் எங்களை அலைக்கழித்திருந்தாலும் அவற்றை மீறி வாழ்க்கையைக் கட்டியெழுப்புகின்ற நம்பிக்கையும் உரமும் மறுபடியும் மறுபடியும் தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கை ஒவ்வொரு அநியாயத்தின் பிற்பாடும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பதாகத்தான் இருக்கிறது.
இந்த முப்பதாண்டுகால போரின் விளைவாக தமிழ்ச் சமூகத்தில் உள்ளுறைந்து கிடக்கின்றன இன்னுமொரு உணர்வு நிலை வன்முறையும் ராணுவமயமாக்கல் தொடர்பான கேள்விகளும் பெருமளவுக்கு இல்லாமல் இருப்பதாகும். இந்த நிலைமை எனக்கு ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஒருசேர எழுப்புகிறது.
போர் அனுபவங்களும் போராட்டமும் தேசியவாதத்தின் பயங்கரமான எழுச்சியும் அந்த எழுச்சியுடன் கூடிய ராணுவமயமாதலும் ஒரு சமூகத்தில் வன்முறையின் பங்கு என்ன என்பது பற்றிய பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.
ஈழ விடுதலைப் போராட்டம் துவங்கிய பொழுது வன்கொடுமைக்கும் அரச ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிக் குரலாகவும் வேறு வழியின்று இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்திய எதிர்ப்புப் போராட்டமாகவுமே அது அமைந்தது. அந்த வகையில் அது தவிர்க்க முடியாததாகவும் அது இருந்தது. கருவில் உருவாகி வரும் புதிய சமூகத்தின் பிறப்புக்கு வன்முறையே மருத்துவச்சி என்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருந்தோம். ஒடுக்குபவர்களுடைய பயங்கரமான வன்முறையை இல்லாது ஒழிப்பதற்கு ஒடுக்கப்படுபவர்கள் மாற்று வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. பிற்பாடு அல்ஜீரிய புரட்சியாளரான பிரா}ன்ட்ஸ் }பனோனின் (Frantz Fanon) எழுத்துகளைப் படித்தபோதும் அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட போதும் புரட்சிகர வன்முறை என்பது ஒரு சத்தியவேள்வி என்பதாகவும் அந்த வேள்விதான் ஓபுது மனிதனைஔ உருவாக்குகிறது என்றும் நம்பினோம். வன்முறையை பலமாகவும் தர்க்கரீதியாகவும் நியாயப்படுத்துகிற வாதங்கள் ஈழப்போராட்டத்துக்குள் பெருத்த ஆதரவைப் பெற்றிருந்தன. எனினும் அந்த நிலைப்பாடு கட்டற்ற வன்முறை அல்லது ஒட்டுமொத்தமான வன்முறை என்ற தளத்திற்கு கீழிறங்கி வருமென்று அப்போதுநான் எதிர்பார்க்கவில்லை.
ஈழப்போராட்டத்தின் கட்டற்ற வன்முறை தந்த துயரத்தில்தான், ஓஎழுதப்படாமலே போயிருக்க வேண்டிய ஒரு கவிதைஔ, ஓஇறுதி வார்த்தைஔ, ஓஎரிந்துகொண்டிருக்கும் நேரம்ஔ போன்ற பல கவிதைகளை எழுதினேன்.
முட்டைப் பொரியல் வேண்டுமானால் முட்டைகளை உடைத்துத்தான் ஆகவேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் அடிக்கடி நினைவூட்டுவார்கள். தவிர்க்க முடியாத முறை அதுவென்று அவர்கள் சொல்வார்கள். ஆனால் 1,000 முட்டைகளை உடைத்து ஒரு சிறு முட்டைப் பொரியலைத்தான் பெற முடியும் என்றால் அதனை என்ன என்று அழைப்பது? அதனை கட்டற்ற வன்முறை எனலாம்.
இத்தகைய வன்முறை எமது இலட்சியங்களையும் கனவுகளையும் உருமாற்றி விடுகிறது என்பதே எனது கருத்து.
உலகின் எல்லா நாகரிகங்களும் பயங்கரமான வன்முறையின் மீதுதான் கட்டியெழுப்பபட்டுள்ளன என்று சொல்லி, நியாயம் கற்பித்து விடுவதில் பெரும் அறவியல் சங்கடங்கள் உள்ளன. கடந்த கால வன்முறைகளினால் எமது வாழ்வு பயன்பெற்றிருக்கிறது என்று ஒருவர் கருத முடியும். அதேபோல வன்முறையும் படைபலமும்தான் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்றன ஒரே சக்தி என்று நாங்கள் வாதிடலாம். அதில் கணிசமான அளவு உண்மையும் இருக்கிறது. ஆனால் மட்டற்ற படைபலத்தையும் ஆயுத பலத்தையும் வன்முறையையும் கொண்டிருந்த அமெரிக்கா, வியட்நாமில் தோல்வியைத்தான் தழுவியது. மட்டற்ற ராணுவபலத்தை வைத்திருக்கின்ற இஸ்ரேலால் பலஸ்தீனர்களை ஒழிக்க முடியவில்லை. பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லாவிட்டால், எத்தகைய படைபலமும் வன்முறையும் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி நீண்ட காலத்துக்கு வெற்றியைத் தராது. பரந்துபட்ட மக்களின் ஆதரவை ஆயுதமுனையாலும் அடக்குமுறையாலும் சமூகக் கட்டுப்பாடுகளாலும் சித்தனைச் சிறைச்சாலைகளாலும் பெற்றுவிட முடியாது. கட்டற்ற வன்முறை என்பது எமது முகங்களை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக நமது எதிரிகளிதும் வில்லன்களது முகங்களைச் சூட நிலைக்கு எம்மைத் தள்ளி விடும்.
இப்போதுள்ள நிலைமையில் வன்முறை அல்ல பிரச்னை என்று சொல்லத் தோன்றுகிறது. அடிப்படையான பிரச்னை என்னவென்றால், கட்டற்ற வன்முறையை நியாயப்படுத்துகிற அல்லது ஏற்றுக்கொள்கிற அல்லது அவற்றைப் பற்றி அக்கறை காட்டாத ஒரு சமூகமாக எங்களது சமூகம் மாறியிருக்கிறது. இந்தச் சமூக மாற்றம்தான், வன்முறையை ஒரு முக்கியமான ஆயுதமாக முன்னிறுத்துவதற்கு ஓர் ஆரோக்கியமான சூழலை வழங்குகிறது. இதுதான் எனக்கு மிகவும் பிரச்னையானதாக இருக்கிறது. நாட்டுப்பற்று, பண்பாடு, கலாசாரம், தேசியம் என்ற பெயர்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் கட்டற்ற வன்முறைகள் நீண்ட காலத்துக்கு எங்களது சமூகத்தை பெருமளவுக்குப் பாதிக்கப்போகிறது.
இந்த ஆண்டு ஐன்ஸ்டைன் தம்முடைய சார்பியல் கோட்பாடுகளை வெளியிட்ட 100வது ஆண்டாகும். அவருடைய விஞ்ஞானக் கோட்பாடுகளில் இருந்தே அணுகுண்டைத் தயாரிப்பதற்கான மூலத்தை விஞ்ஞானிகள் பெற்றுக் கொண்டார்கள்.
அணுகுண்டும் தேசியவாதமும் சேர்ந்து வெடித்த பிற்பாடு ஏற்பட்ட அவலங்களைப் பார்த்த பின்பு ஐன்ஸ்டைன் சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது:
ஓஇசைக்குழு எழுப்புகிற ஒலிக்கு இசைந்தபடி கட்டுக்கோப்பு தளராமல் அணிநடை பயிலும் மனிதன் அடைகிற மகிழ்ச்சியைக் கண்டாலே எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவனுக்குத் தவறுதலாகத்தான் மூளையே வாய்த்திருக்கிறது; அவ்வளவுதான். அவனுக்கு ஒரு முதுகெலும்பு இருந்தாலே போதுமானது. மனித நாகரிகத்தின் இந்த நோய்க்கூறை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். உத்தரவுக்குக் கீழ்படிந்து உருவாகிற வீரம், கட்டற்ற வன்முறை, நாட்டுப்பற்று என்ற பெயரில் உலா வருகிற அர்த்தமற்ற நடவடிக்கைகள் எல்லாம் எனக்கு வெறுப்பூட்டுகின்றன.ஔ
(That a man can take pleasure in marching in formation to the strains of a band is enough to make me despise him. He has only been given his big brain by mistake; a spinal cord was all he needed. This plague spot of civilization ought to be abolished with all possible speed. Heroism by order, senseless violence, and all the pestilent nonsense that goes by the name of patriotism-how I hate them!
War seems to me a mean, contemptible thing: I would rather be hacked in pieces than take part in such an abominable business
Einstein On Militarism (The world As I See It, 1931))
புலம் பெயர்ந்த வாழ்க்கை உங்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
புலம்பெயர்வு என்பது நான் விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்று அல்ல. இப்போது என்னுடைய வாழ்க்கையை முற்றும்முழுதாகப் புலம் பெயர்வு என்று சொல்லமுடியும் தோன்றவில்லை. அலைந்துழல்வு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கிறது. எந்த இடத்திலுமே நிலையாக இல்லாமல், பல்வேறு இடங்களிலும் மாறி மாறி வாழ்வதும் பயணம் செய்வதும் இத்தகைய அலைச்சலால் ஏற்படுகின்ற மன உழல்வும் இருப்பிழப்பும்தான் எனது வாழ்க்கையின் முக்கியமான கூறாக இருக்கிறது. இது மனதளவில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு பெரிதாகும். அந்த வகையில்லொரு மிதக்கும் தாமரை போலவே நான் இருக்கின்றேன். இந்த வாழ்வின்ல் நான் உணர்ந்த இன்னுமொரு முக்கியமான அனுபவமும் இருக்கிறது.
காலனித்துவம் என்பது எங்கள் தலைமுறையினருக்கு வரலாறாகவும் தகவலாகவும்தான் துவக்கத்தில் தெரிந்திருந்தது. ஆனால் ஐரோப்பாவிற்கும் வடஅமெரிக்காவும் வந்து வாழத் துவங்கிய பிற்பாடுதான் காலனித்துவமும் அதனுடைய அடிப்படையான இனவாதமும் எவ்வளவு ஆழமாக இந்த நாடுகளின் சமகால வாழ்க்கையில் ஊடுருவி இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. உண்மையில் இந்த நாடுகளில் எல்லாம் ஒரு ஒடுக்கப்பட்ட காலனித்துவத்தின்கீழ் உழல்கின்ற ஒரு மனிதனாகவே என்னை நான் காண்கின்றேன். மேற்குலக வாழ்க்கை சொல்லித் தந்திருக்கிற இன்னொரு பாடத்தையும் குறிப்பிட வேண்டும். தாராளவாத ஜனநாயகம் கோலோச்சுவதாக பெருமை கொண்டிருக்கின்றன சமூகங்கள் இவை. ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிற்பாடு இந்த நாடுகளின் இரட்டை வேடங்கள் பயங்கரமாக அம்பலமாகிவிட்டன. சித்ரவதை, காலவரையறை அற்று சிறையில் அடைப்பது, அடிப்படை உரிமைகள், பேச்சு சுதந்திரம் போன்றவற்றை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குவது ஆனால் அதேநேரம் ஜனநாயகம் ஜனநாயகம் என்று பேசிக்கொள்வது வழக்கமாகப் போய்விட்டது. அந்த வகையில் எத்தகயை அரசியல் விழுமியங்களை நாங்கள் வரித்துக்கொள்வது என்பது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, அரசியல், மெய்யியல், அறவியல் கேள்வியாக இப்பொழுது எல்லா இடங்களிலும் எழுந்திருக்கிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் சமூகவியலாளராகவும் தற்போது உங்கள் வாழ்க்கை பற்றி?
கடந்த பல ஆண்டுகளாக யார்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக இருந்தேன். இந்த ஆண்டு முதல் கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்திருக்கிறேன். வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூக நீதிகள் பற்றிய ஒரு கற்கைநெறி (Social justice studies) உருவாக்கியிருக்கிறார்கள். இது ஒரு முக்கியமான கற்றைநெறியாகும். வட அமெரிக்காவில் பல்கலைக்கழகப் படிப்பு என்பதே பொருளியல் முன்னேற்றத்துக்கும் தனிமனிதர் மேம்பாட்டுக்கும் சொகுசு வாழ்க்கைக்குமான ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. சமூகப் பொறுப்புணர்வு, சமூக சமத்துவம், சமூகநீதி போன்றவை உயர் கல்வியின் விழுமியங்களாக இல்லாமல் போகின்றன. அசமத்துவமே வாழ்க்கையின் யாதார்த்தமாக எல்லோராலும் விமர்சனங்களற்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி விட்டது. இது எங்களுடைய சமூகப் பொறுப்புணர்வையும் அறவியல் சிந்தனைகளையும் சமத்துவ அரசியலையும் சிதைக்கிறது. சமூக சமத்துவத்தை நோக்கிய ஒரு கல்வி நெறிமுறைதான் சமூகநீதிகள் பற்றிய கற்கை நெறியாகும். அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மானுடவியல், சட்டம், உளவியல், மனிதப்பண்பியல், சுற்றுச்சூழலியல் போன்ற பல்வேறு துறைகளினது கூட்டாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கற்கைநெறி. எனது எல்லாப்பணிகளிலும் சமூகநீதியை மையப்படுத்தி இருப்பதையே நான் விரும்புகிறேன். இலக்கியமாயினும் சரி, இதழியலாயினும் சரி, பல்கலைக்கழ கற்பித்தலாயினும் சரி, அந்த வகையில் எனக்குப் பொருத்தமான - பிடித்தமான துறையில் கல்வி கற்பிப்பது நிறைவைத் தருகிறது. ஆனால் இந்தத் துறைக்குப் பெருமளவுக்கு தமிழ் மாணவர்கள் வருவதில்லை என்பது எனது மனக்குறையாக இருக்கிறது.
ஒரு சராசரி யாழ்ப்பாணத் தமிழன் போல, கல்வி, பதவி, சம்பாத்தியம் என்று நீங்களும் இலக்கு வைத்திருந்தீர்களா? இதில் நிறைவேறாதபோன கனவுகள்? திசை மாறிப் போன இலக்குகள்?
சராசரி யாழ்ப்பாணத் தமிழன் என்ற படிமமே சுவையானதும் பயனுள்ளதுமான விவாதங்களை எழுப்பவல்லது. யாரிந்த யாழ்ப்பாணத்தான் என்ற தலைப்பில் பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய கட்டுரை என் நினைவுக்கு வருகிறது. சாதியத்தையும் .சொத்துடைமையையும் குடும்பக் கருத்தியலையும் விட்டுவிட்டு ஒரு சராசரி யாழ்ப்பாணத் தமிழனைக் கற்பனை பண்ணுவது கடினம்தான். என்றாலும் நான் பிறந்து வளர்ந்த குடும்பம் சராசரி யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பமாக இருக்கவில்லை. அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. கடவுளரையும் பிசாசுகளையும் நான் நம்பியதில்லை. எங்கள் வீட்டுக்குள் நுழைகிற பொழுது முதலில் தெரிவது ஒரு பாரதி படம். உள்ளுக்குள் அறையில், ஒரு பாரதிதாசன் படம் இருந்தது. நடு அறைக்குள் ஒரு சின்ன மேசையில் ரப்பரினால் ஆன ஒரு நடராஜர் சிலை இருந்தது. அதனைத்தான் அம்மம்மாவும் சில நேரங்களில் அம்மாவும் வழிபடுவது வழக்கம். சொத்துகள் என்று எதுவுமே எங்களுக்கு இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வரைக்கும் ஒரு காலனித்துவ கல்வித்திட்டத்துக்கு ஊடாகத்தான் நானும் கல்வியைப் பயின்றேன். அந்தக் கல்வித்திட்டத்தில் விஞ்ஞானத்துக்கு உயர்ந்த மதிப்பும் சமூக விஞ்ஞானங்களுக்கும் கலைகளுக்கும் குறைந்த மதிப்புமே இருந்தது. எட்டாம் வகுப்புக்குப் பிற்பாடு நிறையப் புள்ளிகள் வாங்கிய மாணவர்கள் விஞ்ஞானத்துக்குப் போவதும் நிறையம் புள்ளிகள் பெறாத மாணவர்கள் ஏனைய துறைகளுக்கு அனுப்பப்படுவதுமே அப்பொழுது இருந்த நடைமுறை, இப்பொழுது இருக்கும் நடைமுறையும் கூட. இது அடிப்படையிலேயே கோளாறு உடைய ஒரு கல்வி அமைப்பாகும். நல்ல புள்ளிகள் பெற்றமையால் விஞ்ஞானம் படிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். பல்கலைக்கழகம் வரையில் விஞ்ஞானக் கல்வியைத் தொடர்ந்தேன். ஆனாலும் கணிதம் எனக்கு வேப்பங்காயாகக் கசந்தது. கணித பாடத்தில் எப்பொழுதும் மிகுந்த சிரமத்தின் பிற்பாடே சித்தியடைய முடிந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அரசியல் சூழ்நிலை தீவிரம் பெற்றது. ஏராளமான அரசியல் நூல்களையும் சமூக விஞ்ஞான நூல்களையும் வேட்கையுடன் வாசிக்க நேர்ந்தது. அது ஒரு பெரிய திருப்புமுனை. விஞ்ஞானத்தைவிட சமூக விஞ்ஞானங்கள் பெரும் கவர்ச்சியைத் தந்தன. எனவே அந்தத் துறைக்கு மாறி விட்டேன். எனினும் தாவரங்கள், விலங்குகள், பறவைகளைப் பற்றிய இயற்கை விஞ்ஞானக் கல்வியும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியும் முன்பும் சரி, இப்போதும் சரி மிகுந்த ஆர்வமுடையதாகவே இருந்து வருகிறது. சமூக விஞ்ஞானங்கள் தருகின்ற சவால்களுக்கு நிகரான சவால்களையும் கவர்ச்சியையும் இயற்கை விஞ்ஞானங்களும் தருகின்றன என்பதை கடந்த பல ஆண்டுகளில் கனடாவின் மலைக்காடுகளுக்குள் பயணம் செய்தபோதும், கடல்வள உயிரினங்களின் ஆய்வு நிலையங்களைப் பார்வையிட்ட போதும் மறுபடியும் கண்டுகொண்டேன். அரசியலும் மெய்யியலும் இயற்கை விஞ்ஞானங்களும் இணைந்துகொள்கின்ற பல தளங்கள் இருக்கின்றன. அந்தத் தளங்களுக்கிடையே சஞ்சரிக்க முடிவது மகிழ்வைத் தருகிறது.
இலங்கையில் இருந்தபொழுது எந்தக் கட்டத்திலும் எந்த நேர்முக பரீட்சைக்கும் தோற்றியதில்லை. அரசாங்க உத்தியோகஸ்தராக இருக்கவேண்டும் என்ற கனவு ஒருபோதும் இருந்ததில்லை. சுதந்திரமாகப் பணிபுரிய வேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்து குறிக்கோளாக இருந்தது. பல்கலைக்கழக வாழ்க்கை அல்லது பத்திரிகைத் துறை வாழ்க்கைதான் உகந்தது என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஆனால் பத்திரிகைத் துறையில் முற்றும் முழுதாக சுதந்திரமாக இயங்குவது மிகவும் கடினமானது. நாங்கள்தான் பத்திரிகை நடத்த வேண்டி இருக்கும். இப்போது பல்கலைக்கழக வாழ்க்கை பல வழிகளிலும் படைப்பு ஊக்கத்தைத் தருகிறது.
எந்த வகையிலும் ஒரு சராசரி யாழ்ப்பாணத் தமிழன் போல, பெரும் பதவி, பெரும் சம்பாத்தியம் என்ற கனவுகள் எனக்கு இருந்ததில்லை. ஆனால் எந்த நெருக்கடியிலும் கல்வியைத் தொடர வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தேன். ஒருவேளை இந்த அம்சம் மட்டும்தான் என்னை ஓயாழ்ப்பாணத் தமிழனாகஔ வைத்திருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஓர் இசைக்கலைஞனாக, தவில் வித்துவானாக வரவேண்டும் என்ற கனவுதான் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை என்பதையிட்டு இப்பொழுதும் எனக்கு மனக்குறை. இப்பொழு நான் டொராண்டோ வில் நான் இருக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஆப்ரிக்க நாட்டின் பலவிதமான பறைகளை கற்றுக்கொடுக்கும் ஒரு நிலையம் இருக்கிறது. மாலை நான்கு மணிக்குப் பிற்பாடு அந்த நிலையத்தில் இருந்து வருகின்ற இசையும் பறையொலியும் இந்த மனக்குறையை மேலும் அதிகரிக்கின்றன.
கல்வித்துறை, படைப்பிலக்கியம், சமூகவியல் என்று வெவ்வேறு தளங்களில் செயல்படும்போது ஒன்றை ஒன்று பாதிக்காதா...
இந்தப் பல தளங்களும் ஒன்றை ஒன்று பலப்படுத்துவதாகவும் வளப் படுத்துவதாகவும் நான் உணர்கிறேன். இந்த எல்லாத் தளங்களுக்கும் பொதுவாக இருப்பது சமூக நீதியை நோக்கிய எனது தேடலாகும். இருந்தாலும் வேறெந்த வேலையும் இன்றி சும்மா இருந்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்குமானால் அது உன்னதம்.
மேலும் பல்வேறு தளங்களில் செயல் படும்போது வாழ்க்கை அனுபவங்கள் பல தளங்களிலும் பெருகி வருகின்றன. பல நாடுகளிலும் பயணம் செய்யக் கிடைக்கிறது. பல தளங்களிலும் பணியாற்ற முடிகிறது. இவை அனைத்தும் எனது சிந்தனைக்கும் பார்வைக்கும் கருத்தியலுக்கும் வளம் சேர்க்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் பல்வேறு உலகங்களிலும் சஞ்சரிக்க முடிவது என்னை ஆழமாக்குகிறது மட்டுமின்றி. எனது படைப்புகளுக்கு ஊடாக தமிழையும் வளப்படுத்தும் என்று கருதுகிறேன்.
தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து..
உலகின் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களுக்கு இணையானதாக சமகாலத் தமிழ் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. கவிதை, சிறுகதை. நாவல் இந்த மூன்று துறைகளிலும் பல்வேறு மொழிகளுக்கு இணையான படைப்புகள் தமிழில் வந்திருப்பதாகத் தான் நான் கருதுகிறேன். ஆங்கிலத்திலும் ஆங்கில மொழி பெயர்ப்புகளைப் படித்த அனுபவத்தையும் கொண்டுதான் இதைச் சொல்கிறேன். புனைகதை சாரா எழுத்து, நாடகங்கள் தன் வரலாறுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகளில் நாங்கள் செல்ல வேண்டிய மிக அதிகம்.
நவீன தமிழ்க் கவிதையின் புதிய போக்குகள் வழிகாட்டியாக அமைந்தவரில் ஒருவர் என்பது குறித்து...
எனது அரசியல் சூழலும் கவிதை மற்றும் இலக்கியப் பயிற்சியும் பரந்த வாசிப்பும் காலத்தின் தேவையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது எனலாம். ஒரு சில நல்ல கவிதைகளை எழுதி விடுவது எல்லாருக்கும் சாத்தியமானதே. ஆனால் தொடர்ந்து கவிஞராக இருப்பது என்பது பலருக்கு சாத்தியமாவதில்லை. முதலும் முடிவுமாக நான் கவிஞனாகத்தான் இருக்கின்றேன். என்னுடைய பிற துறை ஆர்வங்கள் அதிலிருந்துதான் கிளைக்கின்றன.
*
http://thisaigal.com/nov05/interviewuni.html